வெள்ளி, 20 நவம்பர், 2009

அமினா


‘சிறுமியோ, வயதான கிழவியோ எல்லோரும் முகத்திரை அணிந்துதான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும். உடைக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். வியாபாரமோ, தொழிலோ செய்ய முடியாது. தனியாக வசிப்பவர்களுக்கு வேலை கிடையாது. வேலையில் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும்.

 திருமணமானவர்களுக்கு பேறுகால விடுப்பு கிடையாது. நிலம், சொத்து வாங்க முடியாது.’ இப்படித் தொடர்கிற அடக்கு முறைக்கு ஒரே காரணம் அவர்கள் பெண்கள். அதுவும் இஸ்லாமியப் பெண்கள்.

எங்கோ நைஜீரியாவில் ஒரு பொந்தில் வசிக்கும் அமினா, பெண்-களுக்கு எதிரான ஆதிக்கப்போக்கையும் கடுமையான சட்டதிட்டங்-களையும் எதிர்கொள்ளத் துணிகிறாள். முடிவற்றுத் தொடர்கிறது அவளது உணர்ச்சிபூர்வமான போராட்டம். நைஜீரியாவையும் இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையையும் கண் முன் நிறுத்தும் அபூர்வமான படைப்பு இது.

‘புத்துணர்ச்சி அளிக்கும் புத்திசாலித்தனமான படைப்பு.’
Anne - Marie Smith, Canadian Critic

‘நம்பிக்கையூட்டும் பாஸிடிவ் கதை. உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய உலகத்துக்கு வாசகர்களை அழைத்துச்செல்கிறது இந்நாவல்.’
Kholood Alqahatani, Journalist, Arab News (Saudi Arabia)

‘ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஓர் உலகில் ஒரு பெண்ணாக இருப்-பதன் பொருள் என்ன என்பதை முகமது உமர் இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகிறார். அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்நாவல் நம்பிக்கையளிக்கும் தீபமாகத் திகழ்கிறது.’
நூலாசிரியர்: முகமது உமர்
வெளியீடு:கிழக்கு பதிப்பகம்
பக்கம்:368       விலை:200.00 உருவா

முதல் காம்ரேட்


சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தம். லெனின் என்கிற செயல்வீரரின் ஞாபகம்.


ரஷ்யா என்றால் ஜார். ஜார் என்றால் ரஷ்யா.ஆள்கள்தான் மாறுவார்கள். ஆட்சி மாறாது.அடித்தாலும் உதைத்தாலும் அவர்தான். கீழ்ப்படிவதற்கு மட்டுமே ரஷ்யர்களுக்கு உரிமை அளிக்கப்பட்டிருந்தது. இதுதான் வாழ்க்கை.இதுதான் விதி. லெனினின் வருகைக்கு முன்பு வரை.

எத்தனையோ தேசங்களில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.ஆனால் ரஷ்யாவில் லெனின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட புரட்சிக்கு இணையாக இன்னொன்றை சரித்திரம் இன்றுவரை கண்டதில்லை.

காரணம், மக்களே வீதியில் இறங்கி ஒன்று திரண்டு நிகழ்த்திக் காட்டிய புரட்சி. வழி காட்டி, வியூகம் வகுத்தவர் லெனின்.வெற்றிக்கு வித்திட்டவரும் அவர்தான்.

வீரமும் திகைப்பும் அதிரடிகளும், அடி ஆழத்தில் தேச நலன் என்கிற பொதுவான சிந்தனையோட்டமும் கொண்டது லெனினின் வாழ்க்கை. மருதனின் புலிப்பாய்ச்சல் மொழியில் லெனின் ஜிவத் துடிதுடிப்புடன் இன்னும் வாழ்கிறார்.

We do not have Soviet Russia today. And there is none to commemorate or celebrate the Russian Communist leaders who came after Lenin. Only two things remain: Communism as an ideology and the memory of the powerful and operational leader Lenin. Russia means tsar. And tsar means Russia. Only individuals come and go. The rule will not change. Whether you are beaten or kicked, tsar is the ruler. The Russians were given the right only to be submissive. Before the advent of Lenin, that was life and that was destiny. Many a nation has seen changes in the government. But history has not seen a revolution equal to the one effected under the leadership of Lenin. The reaon was that people themselves descended into the streets and made the revolution possible by their unity. Lenin guided and arrayed them and paved the way for victory. Lenin's life was comprised of courage, surprises, suddern turns but the well-being of the country was the underlying thread of his thinking. In the language of Marudan which leaps like a tiger, Lenin lives with flesh and blood again

நூலாசிரியர்:மருதன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்:176      விலை:80.00 உருவா

நவம்பர் புரட்சிதின வாழ்த்துக்கள்


முதல் காம்ரேட் நூலில் இருந்து சில பகுதிகள். அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்.


0
தொழிலாளர்களிடம் நெருங்கி பழகினார் லெனின். அவர்களுடைய வாழ்க்கை முறையை, பின்புலத்தை, பொருளாதாரத் தேவைகளைக் கூர்மையாக ஆராய்ந்தார். காலம் காலமாக விளிம்பு நிலையிலேயே அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் அவலம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்தார்.

பல தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார் லெனின். அரசாங்க அதிகாரியைப் போல் புள்ளிவிவரங்கள் சேகரித்துக் கொண்டார். எந்தத் தொழிற்சாலை? எத்தனைப் பேர் வேலை செய்கிறார்கள்? ஆண்கள் எத்தனைப் பேர்? பெண்கள் எத்தனைப் பேர்? அவர்களுடைய ஊதியம் என்ன? ஆபத்தான சூழலில் வேலை செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? அத்தனை விபரங்களையும் குறித்து வைத்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்றார். அவர்களுடன் சில நாள்கள் தங்கினார். குழந்தைகளை இழுத்து அருகில் வைத்துக் கொண்டு பேசினார். நீ ஏன் பள்ளிக்கு போவதில்லை? உனக்கு படிப்பதில் விருப்பம் இல்லையா? வேலைக்குப் போகும்படி உன்னை வீட்டில் நிர்பந்திக்கிறார்களா?

முன்னரே இயங்கிக் கொண்டிருந்த சில புரட்சிகர இயக்கங்களைச் சென்று சந்தித்தார்.

'தோழர்களே, இங்குள்ள தொழிலாளர்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதே!என்ன செய்வதாக உத்தேசம்?'

'மார்க்ஸியம் சொல்லிக் கொடுக்கிறோம். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.'

'இதையெல்லாம் செய்தால் சங்கடங்கள் விலகிவிடுமா என்ன?'

'என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'

'எரிச்சல் வேண்டாம் தோழரே. மார்க்சியத்தை படிப்பது முதல் கட்டம். படித்த விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது அடுத்த கட்டம். நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது.'

அவர்களுக்குப் புரியவில்லை. லெனின் புரிய வைத்தார். நாங்கள் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொண்டவர்களை முன் வரிசையில் உட்கார வைத்து அடிப்படை பாடங்கள் எடுத்தார். சில விஷயங்களை ஆணித்தரமாகத் தெளிவுப்படுத்தினார். தொழிலாளர்கள் மார்க்சியத்தை உள்வாங்க வேண்டும். அமைப்பு ரீதியாக அவர்கள் திரள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் பேராட்டம் அவர்களுக்காகத்தான் என்பதை உணர்த்தியாக வேண்டும். அவர்களை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும். புரிந்ததா?

மார்க்சியத்தை ஒரு சித்தாந்தமாக, புத்தகத்தோடு தங்கிவிடும் ஒரு தத்துவமாக மட்டுமே பார்க்க பழகியிருந்த புரட்சிகர குழுக்கள் முதல் முறையாக அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

மற்றொருபுறம், தொழிலாளர்களின் ஆதரவும் லெனினுக்குக் கிடைத்தது. காரணம், முதல் முறையாக, அவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அளித்தார் லெனின். தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். லெனின் கலந்து கொள்ளும் அத்தனைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் செய்தார். தொழிலாளர்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவராக லெனின் வளர ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

0
முதல் நாள். சுதந்தர சோவியத். அக்டோபர் 26-ம் தேதி. விவசாயிகள், தொழிலாளர்கள், புரட்சி வீரர்கள், கட்சி அங்கத்தினர் ஸ்மோல்னியில் கூடியிருந்தனர். அனைவரும் மேடையை உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கே அவர்?

கூடியிருந்தவர்களுக்கு அந்த இடம் போதவேயில்லை. அறை பிதுங்க பிதுங்க நின்று கொண்டிருந்தார்கள். நிற்பதற்கு இடம் இல்லாதவர்கள் ஜன்னல் வழியாக முண்டியத்து மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னமும் சிலர் தூண் விளிம்புகளில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.

உற்சாக மிகுதியால் சிலர் தலையில் அணிந்திருந்த தொப்பிகளை உயரே வீசிக் கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகக் கூச்சல்.

லெனின் மேடையில் தோன்றினார்.

கொண்டாட்டத்துக்கான சுவடே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருந்தது அவர் முகம். பார்வையால் விழுங்கி விடுவதைப் போல் மொத்த கூட்டத்தையும் ஒரு முறை பார்த்தார். பிறகு, கைகளை உயர்த்தினார்.

’இரண்டு ஆணைகளை இந்தச் சபையின் அங்கீகரத்துக்காக சமர்பிக்கிறேன்’.

அந்த அறை முழுவதும் எதிரொலித்தது அவர் குரல்.

முதல் ஆணை, சமாதனம் பற்றியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது நம்முடைய போர் அல்ல. அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை போர் அல்ல. சமாதானம். பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இந்தச் சபையின் ஒப்புதலை வேண்டுகிறேன்.

இரண்டாவது, நிலம். நிலம் மீதான தனியுரிமை நீக்கப்படுகிறது. நிலப்பிரபுக்கள், அரச குடும்பங்கள், குருமார்கள் போன்றவர்களுக்குச் சொந்தமான நிலம் பறிமுதல் செய்யப்படும். சோவியத் சபையின் பராமரிப்பின் கீழ் அவை வந்து சேரும். பறிமுதல் செய்யப்பட்ட நிலத்துக்கு ஈட்டுத்தொகை தர இயலாது. ஏழைகளிடம் உள்ள நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.

நன்றி.

அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிவிட்டார் லெனின்.

புதிய சோவியத் தேசம் மலர்ந்த முதல் நாளே இரண்டு அரசாணைகள். இரண்டுமே முக்கியமானவை. ரஷ்யர்களின் வாழ்கை மாற்றி அமைக்கக்கூடியவை. சந்தோஷம். மகிழ்ச்சி. ஆனால், கூடியிருந்தவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. போல்ஷ்விக் கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அரசாங்கமே அடியோடு மாறிவிட்டது. புதிய சோவியத் மலர்ந்திருக்கிறது. ஒரு சிறிய கொண்டாட்டம்? உற்சாகமாக சில வார்த்தைகள்? ம்ஹும். கேளிக்கை, கும்மாளம் வேண்டாம். குறைந்தது ஒரு வெற்றி புன்னகை? சரி அதுவும் வேண்டாம். கையசைவு? பெருமிதமாக ஒரு பார்வை. நாங்கள் வென்றுவிட்டோம் என்று ஒரே ஓர் அறிக்கை? ம்ஹும். எதுவுமே இல்லை. வந்தார். அரசாணைகளை வாசித்தார். நன்றி சொன்னார். போய்விட்டார். என்ன மனிதர் இவர்?

0

செஞ்சதுக்கம் , மாஸ்கோ. எப்போது போனாலும் அந்தக் கட்டடத்தின் வாசலில் மக்கள் எறும்புகளைப் போல் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள்.

நெருங்கிப் பார்த்தால் இரண்டு தனித்தனி வரிசைகள் இருப்பது தெரியும். ஒன்று ரஷ்யர்களுக்கு. இன்னொன்று அயல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. கொல்லும் பனிக்காலத்தில்கூட மக்கள் அமைதியாகவே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளையும் கையோடு அழைத்து வருவார்கள். அவர்கள் காது வரை கம்பளியைச் சுற்றி.

சில சமயம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கு மேல்.

பழுப்பு நிற சீருடை அணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே இருப்பார்கள். மெடல் டிடெக்டரால் உங்கள் உடலை மேய்வார்கள். பாக்கெட்டில் இருப்பதை துழாவுவார்கள். உடைமைகளை உள்ளே கொண்டு போக முடியாது. நீங்கள். நீங்கள் மட்டும்தான்.

தவிரவும், இரண்டு இரண்டு பேராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

அந்த அறையை மார்பிள் அறை என்று அழைக்கிறார்கள். வெள்ளையும் கருப்புமாக மார்பிள் பதிக்கப்பட்டிருக்கம். இடையே சிவப்புச் சதுரங்கள்.

அறைக்குள் நுழைந்துவிட்டால் சில நிமிடங்கள் எதுவும் தோன்றாது. வெறுமை மட்டுமே முழுக்க முழுக்க நிறைந்திருப்பதாக நீங்கள் நம்புவீர்கள். அதிக வெளிச்சம் இருக்காது. ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள் என்பதால் பரிபூரன அமைதி. அமைதி மட்டுமே.

அறைக்கு நடுவே நடந்து சென்றால் லெனின் படுத்திருப்பதைக் காணலாம். கறுப்பு சூட். கழுத்தில் டை. அருகில் செல்லலாம். ஓரளவுக்கு நெருக்கமாகவே.

லெனினின் கைகளில் தெரியும் பளபளப்பை பார்க்கும்போது படுத்திருப்பது பொம்மையோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் முகத்தைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் வராது. வழக்கத்தை விட கூடுதல் பிங்க் நிறம். உயிர்ப்புடன் இருப்பது போன்ற உணர்வு.

அந்த உணர்வு கலைவதற்குள் வெளியேறிவிட வேண்டும். அல்லது நிர்பந்திக்கப்படுவீர்கள்.

சில விநாடிகள். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நிமிடங்கள். அதற்கு மேல் நிற்க முடியாது. பின்னாலிருந்து மெலிதாக அழுத்துவார்கள்.

’தோழரே!’

மீள்பதிவு கட்டுரை
நன்றி:மருதன்
புகைப்படம். வினவு

வியாழன், 5 நவம்பர், 2009

கையறு நிலைக் கதறல்: தீபச்செல்வன் கவிதைகள்

தமிழ்நதி

ஈழமண்ணை சாவெனும் சர்ப்பம் முற்று முழுதாக விழுங்கிவிடுமோ என்று ஐயுறும் சூழலில் தீபச்செல்வனின் இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சகல அதிகாரங்களும் கைகோர்த்துநின்று, அப்பாவி சனங்கள் மீது மிகக்கோரமான, மனிதாபிமானமற்ற தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தனது சொந்த மக்களைச் சூழும் மரணத்தை, கூட்டம் கூட்டமான இடப்பெயர்வை, பசியை, நோயை, மனப்பிறழ்வை பார்க்கவும் கேட்கவும் விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கையறு நிலைக் கதறலே இந்தக் கவிதைகள். போருக்குள் பிறந்து, அதற்குள்ளே வாழ்ந்து, கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன.


ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் எப்படி வெறிச்சிட்டுக் கிடக்கும், அங்கு மனித உயிர் எவ்வளவு மலினமானதென்பதை ‘யாழ். நகரம்’ என்ற கவிதை பேசுகிறது.

‘நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்’

மனிதர்களது மேன்மைகள் யாவும் துப்பாக்கிகளால் அழிக்கப்பட்டுவிட்டன, எல்லா உன்னதங்களும் இழிவின் காலடியில் சரிந்துவிட்டன என்பதற்கு தீபச்செல்வனின் மேற்கண்ட வரிகளைவிடச் சாட்சியம் வேண்டியதில்லை.

இத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். ‘மாதா வெளியேற மறுத்தாள்’, ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’, ‘ஏ-9 வீதி’, ‘எரிந்த நகரத்தின் காட்சிக் குறிப்பு’, ‘பறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்’ போன்ற கவிதைகள் சூனிய நிலத்தைப் பற்றியே பேசுகின்றன. அகதிகளாய் ஓடிக்கொண்டே இருக்கும் நிராதரவான மக்களைத் தொடர்ந்து போகின்றன இவரது வார்த்தைகள்.

‘நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி
நிழல் வீடுகளைப் பறிகொடுத்துவிட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்’

பல இடங்களில் பாலஸ்தீனிய கவிஞராகிய மஹ்மூத் தர்வீஷ்சை தீபச்செல்வனின் கவிதைகள் ஞாபகப்படுத்துகின்றன. அவர் இருப்பிழந்து எங்கெங்கோ அலைந்தபோதிலும் தன் தாய்நிலத்தையே நினைத்துக்கொண்டிருந்தார். பாலஸ்தீனத்தை அவர் காதலித்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான அவருடைய கவிதைகள் புகழ்பெற்றவை. அவர் எழுதுகிறார்:

‘அவன் எல்லாத் துறைமுகங்களில் இருந்தும்
துரத்தப்பட்டான்
அவனது அன்புக்குரியவளையும்
அவர்கள் தூக்கிச் சென்றனர்
பின்னர் கூறினர்
நீ ஒரு அகதி என்று’

நாடற்று அலையும் எல்லோருக்குள்ளும் துக்கம் நிரம்பி வழிகிறது. அது கவிதைகளாகப் பெருக்கெடுக்கிறது. கண்முன்னால் சொந்தச் சனங்கள் செத்து விழுகின்றனர். மரண பயத்தில் கதறி ஓடுகின்றனர். தேடுதல் வேட்டையில் கைது செய்யப்படுகின்றனர். பெண்கள் வன்கலவி செய்யப்படுகிறார்கள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படைப்பு மனத்தின் வெளித்தள்ளலே தீபச்செல்வனின் கவிதைகள். வேறொன்றும் செய்யவியலாது. கவிதை எழுதலாம். ஆனால், எழுதுவதுகூட பாதுகாப்பானதல்ல என்று அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. தனது முன்னுரையிலேயே கூறுகிறார்:

‘எதைப் பற்றியும் பேசமுடியாத மலட்டுச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்ற செயலாகவே கூறப்படுகின்றது’ இருந்தும் அவர் எழுதுகிறார். இல்லையெனில் மூளைக்குள் வெளித்தள்ளப்படாத வலி குந்தியிருக்கும். ஒருநாள் சித்தம் கலங்கிப்போகும். இலங்கை அரசாங்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை மிகச்சரியாகப் புரிந்துவைத்திருக்கிறார் தீபச்செல்வன். மக்களை மரணத்தின் மூலம் பணியவைப்பது, கோழைகளாக்கி கும்பிட வைப்பது, ‘ஒன்றும் வேண்டாம் விட்டுவிடுங்கள்’ என்று கையேந்த வைப்பது. ‘நிறைவேற்று அதிகாரம்’ என்ற கவிதையின் வரிகள் இவ்விதம் அமைகின்றன.

‘எங்கள் பாடலைத்
திருக வேண்டும்
நாங்கள் அழுது வடியவேண்டும்
என்ற செய்திக்காகவே
அவர்களது தேசம்
காத்துக் கிடந்தது’

... .. .. .. ..
எங்கள் பாடலை
கொலைசெய்யத் தீர்மானித்தார்கள்
நிறைவேற்று உடைகளை
அணிந்தபடி‘

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பிலுள்ள அநேகமான கவிதைகள் அரசியலைப் பேசும் கவிதைகள்தான். பொதுவான கவிதைகளையே ‘நன்றாக இருக்கின்றது’ என்று சொல்வது ஒரு சம்பிரதாயம் அன்றேல் வெறுஞ்சொல். கவிதைகளை அனுபவிக்கத்தான் முடியுமே தவிர அளவிட முடியாது. ‘நீ பேசாது போன பின்னேரம்’, ‘அம்மாவின் வீடு கட்டும் திட்டம்’ போன்ற சில கவிதைகளைத் தவிர்த்துப் பார்த்தால், மிக முக்கியமான தொகுப்பு. ‘நீ இரத்தம் சிந்திய தெருக்களில்’ வரும் நம்பிக்கை கலந்த வரிகளைப் போல அற்புதங்களுக்காகவே நாங்கள் காத்துக்கிடக்கிறோம்.

‘என்றேனும் ஒருநாள்
நமது நகரின் பிரதான தெருவில்
உனது சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்’

தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி. நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம். கொலை படுகளத்தைப் பார்க்க விதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் கண்ணீர்த் துளிகள்.

கவித்துவம், சொற்கட்டு, செறிவு, படிமம் என்பதற்கப்பாலும் இருக்கிறது கவிதை. அது உண்மையை எழுதுவது. உண்மைக்காய் துடிப்பது. உண்மையைச் சார்ந்திருப்பது. அவ்வகையில் தீபச்செல்வனின் முதற்தொகுப்பே மிக முக்கிய தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. மிக இளைய வயதில் இப்படி எழுத முடிகிறதே என்று வியப்பதா அன்றேல் இப்படி எழுத நேர்ந்ததே என்று துக்கிப்பதா என்று தெரியவில்லை.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
தீபச்செல்வன்
விலை:ரூ 60

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
669,கே.பி.சாலை
நாகர்கோவில் -629001
தொலைபேசி: 04652278525


நன்றி: - தமிழ்நதி
                கீற்று இணையம்


வாழ்வே இலக்கியம்

தீம்பாவைகேரளாவில் தீண்டாமை தலைவிரித்தாடிய நேரமது. மக்களின் பிரச்சனைகளை பேச வேண்டிய இலக்கியமும் எழுத்தும் கூட நம்பூதிரிகளிடமும் உயர்ஜாதி மக்களிடம் சிக்கித் திணறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தான் ஒடுக்கப்பட்ட பாவப்பட்ட மக்களின் வாழ்க்கையை தன்னுடைய எழுத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் வைக்கம் முகம்மது பஷீர். தன் எழுத்துக்காகவே அதிகம் தண்டனைக்குள்ளான கேரள எழுத்தாளரும் அவராகத் தான் இருக்க முடியும்.


பஷீரின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. அனுபவங்களைத் தேடி அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரராக, அரசியல் கைதியாக, போதை அடிமையாக, மனநோயாளியாக, சந்நியாசியாக, பிச்சைக்காரனாக தனக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் இலக்கியமாக்கியவர் வைக்கம் முகம்மது பஷீர்.

அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை மட்டுமே எழுதுபவராக, ஆதிக்க சக்திகளை தொடர்ந்து கேள்வி கேட்பவராக, சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவராக என ஒரு புரட்சி எழுத்தாளராகவே பஷீர் வாழ்ந்திருக்கிறார். அவரின் வாழ்க்கையின் நடைபெற்ற அத்தனை சம்பவங்களையும் தொகுத்து ஈ.எம்.அஷ்ரப் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த இந்த நூலை குறிஞ்சிவேலன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘காலம் முழுதும் கலை’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மலையாள புத்தகத்தில் இருக்கும் சுவாரஸ்யம் சிறிதும் குறையாமல் இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள்ளது.

காயி அப்துல் ரஹ்மான் என்ற ஏழை வியாபாரியின் ஆறு குழந்தைகளில் மூத்தவர் தான் முகம்மது பஷீர். வறுமை, மதநம்பிக்கைகளில் ஊறிக்கிடந்த சமுதாயத்தை எதிர்த்து தன் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை படிக்க வைத்தார் அப்துல் ரஹ்மான். சுதந்திரப் போராட்டமும், தீண்டாமை எதிர்ப்பு போராட்டமும் கேரளாவில் உச்சத்தில் இருந்த நேரமது.

கோவிலுக்குள் நுழையும் உரிமை கேட்டு தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கண்களில் சுண்ணாம்பைத் தேய்ப்பது, சிறுநீர் கழிப்பது, கற்களால் அடிப்பது என போலீசாரும், மேல்சாதியினரும் துன்புறுத்தினர். இந்த தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் கலந்து கொண்டார். காந்தியும் வைக்கத்திற்கு வந்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி பஷீரை வெகுவாக பாதித்தது. பஷீரும் படிப்பை விட்டுவிட்டு காங்கிரசில் சேர முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறி கோழிக்கோடு சென்றார். காங்கிரசில் இணைந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். போலீசாரால் மிகக் கடுமையாக தாக்கப்பட்டார். மூன்று மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. சிறையில் தங்களைத் துன்புறுத்தும் அனைவரும் உயர்ஜாதி இந்துக்களாக இருப்பதைக் கண்டார்.

அவர்களை கிண்டல் செய்யும் பாணியில் சிறையில் பல குறும்புகள் செய்தார். ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து அதில் துளசி இலைகளைப் போட்டு வருபவர்கள் மீது ஊற்றி அவர்களை புனிதப்படுத்தினார். உயர் அதிகாரிகளைப் போல பூணூலும் போட்டுக் கொண்டார். இதனால் இன்னும் சித்திரவதைகளுக்கு ஆளானார். தன்னை அடித்துத் துன்புறுத்தும் வாரியார் என்னும் இன்ஸ்பெக்டரை கொன்று விடத் தீர்மானித்தார். விடுதலையானதும் கத்தியை எடுத்துக் கொண்டு அவரைக் கொலை செய்யச் சென்றார். வழியில் காங்கிரஸ் தலைவர் ஒருவரால் தடுக்கப்பட்டார். இவ்வளவு வேகமும், கோபமும் இந்த சிறிய வயதில் இருக்கக்கூடாது என அவர் அறிவுறுத்தினார்.

ஆனால் அந்தக் கோபம் அவர் வாழ்க்கை முழுவதும் இருப்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் காண முடிகிறது. இருபது வயதிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினார். அவை பயங்கரவாதத்தை தூண்டுபவையாக இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்ய வாரண்ட் வந்தது. வைக்கத்தில் இருந்து தப்பி எர்ணாகுளம் சென்று அங்கிருந்து கண்ணனூர் வழியாக பெங்களூர் சென்றார். அடுத்த ஒன்பது வருடங்களும் பஷீர் தீவிர பயணம் மேற்கொண்டார்.

கையில் சிறிதும் காசில்லாமல் நடந்தும் வாகனங்களிலுமாக தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். பலவகைப்பட்ட மக்களையும் வாழ்க்கையையும் அறிந்து கொள்வது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. பல நாட்கள் தண்ணீர் மட்டுமே அவரது உணவாக இருந்திருக்கிறது.

இடையில் சில மாதங்கள் கப்பல் தொழிலாளியாக மெக்காவுக்கும் பயணம் செய்தார். தன்னுடைய பெயரை ராமச்சந்திரன் என மாற்றிக் கொண்டு அஜ்மீர் பாலைவனத்தில் நிர்வாண சாமியாராக வசித்தார். அதன்பின் புத்தகயாவில் சில காலம் வாழ்ந்தார். முஸ்லீம் சந்நியாசிகளான சூஃபிகளுடன் சில காலம் வாழ்ந்தார். எல்லைக்காந்தி, ஷேக் அப்துல்லா ஆகியோருடனும் சில காலம் வசித்தார்.

தனக்குக் கிடைத்த அத்தனை அனுபவங்களையும் பின்னாளில் எழுத்தில் பதிவு செய்தவர் பஷீர்.

மீண்டும் ஊர் திரும்பியதும் தன்னுடைய வேலை எழுதுவது மட்டுமே என்று தீர்மானித்தார். அரசர்களும், பணக்காரர்களும் மட்டுமே கதைகளின் நாயகர்களாக இருந்த நேரத்தில் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களையும் வஞ்சிக்கப்பட்டவர்களையும் பற்றி எழுதினார். திருவிதாங்கூர் சமஸ்தானம் பற்றியும், சர்.சி.பி.ராமசாமி ஐயர் பற்றியும் ‘அதிர்ஷ்டம் கெட்ட என் தேசம்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இந்தக் கட்டுரை வெளிவந்த தீபம் இதழ் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

‘பட்டத்தின் பேய்க்கனவு’ என்ற பெயரில் அரசை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியதற்காக கைது செய்யப்பட்டார். நண்பர்கள் உதவியுடன் சிறையில் இருந்தபடியே ‘மாத்ருபூமி’, ‘உஜ்ஜீவனம்’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார். இந்த நேரத்தில் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் நெருக்கமான உறவு ஏற்பட்டது. கம்யூனிஸ்டு கட்சியை ஆதரித்த அதே நேரத்தில் அதன் தனிநபர் சுதந்திரமின்மையை கடுமையாக எதிர்க்கவும் செய்துள்ளார்.

ராமசாமி ஐயருக்கு எதிரானக் கட்டுரைக்காக பஷீருக்கு ராஜதுரோகத் தண்டனையாக இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இனிமேல் இப்படிப்பட்ட கட்டுரை எழுத மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அது படைப்பாளியின் சுதந்திரத்தில் தலையிடும் வேலை என்று கூறி பஷீர் மறுத்ததோடு சிறைத் தண்டனையை முழுமையாக அனுபவித்தார்.

மிகச் சிறந்த கதைகளான மதிலுகள், கைவிலங்கு, டைகர், இடியன் பணிக்கர் போன்ற கதைகளை பஷீர் இந்தச் சிறை வாசத்தின்போது தான் எழுதியிருக்கிறார். வெளியில் வந்ததும் புத்தகக் கடைகள் நடத்தினார். இந்த நாட்களில் வாசிப்பது, எழுதுவது, பட்டினி கிடப்பது என்பதுதான் அவரது வாழ்க்கையாக இருந்தது.

பஷீரின் எழுத்துக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர் அருவெறுக்கத்தக்க மொழியில் எழுதுவதாகவும், அவருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை எனவும், நல்ல மொழிநடை இல்லையெனவும் விமர்சகர்கள் விமர்சித்தார்கள். சமுதாயம் வரையறுத்து வைத்துள்ள ஒழுக்கம், சாதி போன்ற பல விஷயங்களை பஷீர் கேள்விக்குள்ளாக்கினார் என்பதே அதற்கு காரணம்.

பஷீருக்கு ஆதரவாக பிரபல இலக்கிய விமர்சகர் எம்.பி.பால் தன்னுடைய கருத்தை இவ்வாறு தெரிவித்தார். “இரத்தத்தைக் கண்டால் தலைசுற்றக் கூடியவர்கள் பஷீரின் எழுத்துக்களைப் படிக்காமல் இருப்பதே நல்லது. நம்பூதிரிகள் மற்றும் உயர்ஜாதி இலக்கியவாதிகளின் உரையாடலிலும் சமுதாய அமைப்பிலும் மகிழ்ச்சி கண்டவர்களுக்கு பஷீரின் கோழி இறைச்சியும் பிரியாணியும் பிடிக்கும் என்று தோன்றவில்லை. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இலக்கியம் உயர்ஜாதி முதலாளிகளின் சொத்து ஒன்றும் அல்ல”.

தன்னுடைய ‘பால்யசகி’ என்ற நாவலின் முன்னுரையில் இதற்கு பஷீர் பதில் அளித்துள்ளார். “மஞ்சள் நீராட்டு விழாவை மட்டும் இலக்கியமாக்கலாம். ஆனால் சுன்னத் கல்யாணத்தை இலக்கிய குலப் பெருமைக்கு ஒத்துவராது என்று நினைப்பவர்களிடம் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை”.

ஒருசமயம் நண்பர்களோடான இலக்கியக் கூட்டத்தில் நண்பர் ஒருவர் பஷீருக்கு மலையாள இலக்கணம் தெரியவில்லை என்றும், அவர் அதைக் கற்றுக்கொண்டு எழுத ஆரம்பிக்கலாம் எனவும் உபதேசித்தார். அதற்கு பஷீரின் பதில், “போடா, உன் பொண்டாட்டிக்கு வரதட்சணையா வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன். எனக்குத் தெரிஞ்ச எழுத்துக்களைத் தான் எழுதுவேன். அது யாருக்கு சேரணுமோ அவங்களுக்கு போய்ச் சேரும். உன்னோட ஏட்டு இலக்கணம் எனக்குத் தேவையில்லை”

தன்னுடைய எழுத்துக்கள் யாருக்கு என்பதில் பஷீர் தெளிவாக இருந்தார். அதனால் தான் தன்னுடைய புத்தகங்கள் மிகக் குறைந்த பக்கங்களில் மிகக்குறைந்த விலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். எழுத்துக்கள் எளிய மக்களின் பேச்சு வழக்கில் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் கொண்டார். இலக்கியம் என்ற பெயரில் தன் புத்தகத்தில் அதிக திருத்தம் செய்வதையும் அவர் அனுமதிக்கவில்லை.

பஷீர்ன் நாவல்கள் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவை திரைப்படமாகவும் வெளிவந்தன. அதன் திரைக்கதையையும் பஷீரே எழுதினார். அதிலும் சில திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தான் வாழ்ந்த காலம் வரையிலும் பெரும் எழுத்தாளராக, சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு மனிதனாக, அனுபவங்களை தேடி பயணப்பட்ட ஒரு பயணியாக கேரள மக்களால் பேப்பூர் சுல்தானாக வாழ்ந்த பஷீரின் வாழ்க்கையை தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நூல்: காலம் முழுதும் கலை- ஈ.எம்.அஷ்ரப்
தமிழில் : குறிஞ்சிவேலன்


கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை,
சென்னை-18
பக்கம்: 183
விலை: ரூ.75

நன்றி: தீம்பாவை
              கீற்று இணையம்

கருத்ததொரு வரலாற்றின் பதிவு- நாடக விமர்சனம்

எஸ்.கருணா


இதுகாறும் நாம் கண்டும், கேட்டும், பழகியும் வந்த புராண இதிகாசங்கள், பழங்கதைகள், மரபுவழிக்கதைகள் என அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியது பண்பாட்டுத் தளத்தில் பணியாற்றுகிறவர்களின் கடமையாக சமூகம் முன் வைத்துள்ளது. பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து கேட்டு வந்திருக்கிற இத்தகைய கதையாடல்கள் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவதும், மறு விசாரணை நடத்துவதும், அதன் மரபு அடுக்குகளில் மறைந்திருக்கிற அல்லது திட்டமிட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்கிற பேருண்மைகளை, புறக்கணிப்புகளை, இருட்டடிப்புகளை வெளிக்கொண்டுவரும்.


இத்தகைய மறுவாசிப்புக்குட்படுத்தும் நடவடிக்கைகள், இதுவரையிலான நமது நம்பிக்கைகளின் மீது அதிர்வுகளை ஏற்படுத்தி புதிய கேள்விகளை எழுப்புவதன் மூலம், புதிய சாளரங்களை திறந்து வைக்கவும் உதவுகிறது. ஏற்கனவே, இதுபோன்ற மறுவாசிப்பு முயற்சிகள், கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் என பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் அரங்கேறியிருக்கின்றன. அந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உபபாண்டவம்' ஒரு காத்திரமான முயற்சியாக தமிழில் வந்திருந்தது.

தமிழ் நாடகத் துறையில் முக்கிய பங்களிப்பாற்றியிருக்கிற, சென்னை கலைக்குழுவின் தலைவரும் இயக்குனருமான ‘பிரளயன்' இயக்கத்தில் அரங்கேற்றப்பட்ட ‘உபகதை' நாடகம் மறுவாசிப்பின் புதிய எல்லைகளையும் ருசியையும் நமக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது. அதன் நீட்சியாக இம்முறை பிரளயன், கையில் எடுத்திருப்பது தமிழ்க்குலத்தின் கருத்த வரலாற்றை. பறம்பு மலையின் மன்னன் பாரியின் கதையை ‘பாரி படுகளம்' என்ற பெயரில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார் பிரளயன்.


புதுவை பல்கலைக்கழகத்தின் நாடகவியல் துறைக்காக, அம்மாணவர்களின் பங்களிப்புடன் தயாரித்து அரங்கேற்றப்பட்ட ‘பாரி படுகளம்', தமிழ் நாடக உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது என உரக்கப் பேசலாம். மூவேந்தர்களின் பெருமை நாமறியாததல்ல. அதுவும் தமிழக அரசியல் தளத்தில் அவ்வப்போது இவ்வேந்தர்களின் வாரிசுகளாக தங்களை அடையாளப்படுத்தி புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் தலைவர்களையும் தமிழகம் ‘தேமே' எனப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

மூவேந்தர்களின் காலம் பொற்காலம் என்றும், தேனாறும் பாலாறும் அந்தக் காலத்தில் ஓடியதாகவும், கரைகளின் இருபுறமும் மக்கள் உட்கார்ந்து மொண்டு, மொண்டு குடித்து வந்ததாகவும் எழுந்த கனவுச் சித்திரங்களை இந்த நாடகத்தின் சில காட்சிகள் கலைத்துப் போடுகின்றன. கடவுளையும், தமிழையும் தமிழ்க்குடிகளையும் ரட்சித்தும் காத்தும் வந்த குற்றம்காண முடியாத குணபுருஷர்களாகவும் தமிழ்க்குல வரலாற்றின் ஆகச் சிறந்தவர்களாகவும் கட்டமைக்கப்பட்ட மூவேந்தரின் பிம்பங்களை இந்த நாடக மாந்தர்கள் போட்டுடைத்து அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள்.

‘முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி' என்ற வரிகளை யோசித்துக்கூட பார்க்க முடியாதவகையில் புளகாங்கிதம் அடைந்து கிடக்கும் தமிழ்க் குடிகளின் முன்பு, அந்த வரிகள் கற்பனைதானே தவிர, அதை நம்பி மூவேந்தர்களும் முட்டாள்களாகி சண்டைக்கு வந்து விட்டார்களே என அங்கவையும், சங்கவையும் எள்ளி நகையாடும் காட்சி ‘சுர்ர்' என உறைக்கிறது. காடும் மலையும் பாறைகளுமாக உள்ள ஒரு மலையின் நிலப்பரப்பில் ‘தேர்' ஓடக்கூடிய அளவிற்கு சமமான பாதை எப்படி இருந்திருக்க முடியும்? என்ற கேள்வியை நாடகத்தின் ஊடே பார்வையாளர்களின் மூளை எழுப்பிப் பார்த்து தனக்கு தானே தலையில் குட்டு வைத்துக் கொள்கிறது.

பறம்பு மலையை ஆண்ட ‘பாரி' மன்னனின் வாழ்வையும், மன்னனுக்கும், மக்களுக்கும் இருந்த நேச உறவையும், மலைக்குடிகள் என தரக்குறைவான நோக்கத்தில் அழைக்கப்பட்ட அம்மக்களுக்கு தங்கள் மலையின் மீதும், மரங்களின் மீதும், வனத்தின் மீதும் இருக்கும் ஒப்பற்ற அன்பையும், காட்சிகளாக பதிவு செய்திருக்கிறது நாடகம். பாரி மன்னனை வீழ்த்த மூவேந்தர்களும் செய்யும் சதியாலோசனையும், வெற்றி பெற்ற பிறகு பறம்பு மலையை பங்கிட்டு கொள்வது பற்றி அவர்கள் நடத்தும் பங்கீடு காட்சியும், மண் பிடிப்பதிலும், பெண் பிடிப்பதிலும் அவர்களுக்கிருந்த வேட்டை மனசின் வெறியை துல்லியமாகப் படம் பிடிக்கிறது.

நாடகத்தின் பல காட்சிகளும், வசனங்களும் சமகால அரசியலை ஆங்காங்கே ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ‘கூட்டுப்படைத்தளபதி' என்ற சொல்லாடலும், மூவேந்தர்களின் கூட்டுப்படைகளும் முகமூடி அணிந்த திருடர்களைப் போல பறம்பு மலையை ஆக்ரமிப்பதும் பேராசிரியர் ரவீந்திரனின் ஒளியமைப்பில் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சின்னஞ்சிறு நாடான ‘ஈராக்' மீது அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டுப்படைகள் நடத்திய ஆக்ரமிப்பும், தாக்குதலும், அந்த அரசியலும், இந்த நாடகத்தின் காட்சிகளில் எதிரொலிப்பதை துல்லியமாகப் பதிவு செய்கிறது நாடகம். சிறிய மலைநாடான பறம்புவைப் பிடிக்க மூவேந்தர்களும் செய்யும் சதிகளினூடே ஜார்ஜ் புஷ்ஷின் முகமும், டோனி பிளேரின் முகமும், நமது நினைவுக்கு வந்து போவது இந்த நாடகத்தின் மைய இழைக்கு நெருக்கமாக நம்மை கொண்டு செல்கிறது.

‘பெருங்குடி' வேந்தர்களான தங்களை விட ‘சிறுகுடி' மன்னனான பாரியின் புகழ் உயர்ந்து கொண்டே போவதை தாங்கிக் கொள்ள முடியாத ‘பெருங்குடி' மனத்தின் அடுக்குகளை, அழுக்குகளை நாடகக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக திறந்து காட்டுகின்றன. ‘சிறுகுடி'களை அழித்தொழிக்கும் ‘பெருங்குடி'களின் வர்ணாசிரமச் சூதாட்டத்தின் பகடை காயாக்கப்பட்டு ‘பாரி' மன்னன் வீழ்த்தப்பட்ட கதையை நாடகம் அதன் போக்கில் சொல்லிக் கொண்டே சென்று முடிகிறது.

படுகளத்தில் அம்புகளுடன் வீழ்ந்து கிடக்கும் பாரி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற ‘பெரியார்' சொல் கேட்டு தவறா? என்று எழுப்பும் கேள்வியும், ‘தமிழால் ஒன்றுபடுவோம்' என்று முன் வைக்கும் யோசனையும், நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்னும் ஒலிப்பதை நாடகம் பார்வையாளர்களுக்கு மௌனமாய் சுட்டிக் காட்டி நிறைவடைகிறது.


ஒன்றே முக்கால் மணி நேரம் நடிக்கப்பட்ட இந்நாடகம் பாரி வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் தமிழ் அடையாளங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டதே இதன் சிறப்பம்சமாகும். ‘முல்லைப் பண்'ணில் தொடங்கி, நடுகல் வழிபாடு, வீரர் வணக்கநாள், பாணர்களின் பாடல், ஆட்டம், ஆணும்பெண்ணும் கூடிக் கள்ளுண்பது, அங்கவை சங்கவையின் பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் காட்சிகள், கூட்டுப்படை வீரனுடன் ஒண்டிக்கு ஒண்டியாக கத்திச் சண்டை போட்டு வீழ்த்தும் மலை நாட்டுப் பெண், வன உயிர்களை தன்னுயிர்களாக நேசிக்கும் மலை மக்களின் மனம், மலைவளங்களை வணிகத்தின் வேட்டை காடாக்க மறுக்கும் பாரியின் மனம், மூவேந்தர்களின் ‘பெருங்குடி' பெருமிதம் என எல்லாவற்றையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் பிரளயன்.

நாடகத்தின் முழு வண்ணமும் மலையின் ‘செம்மண்' வண்ணத்திலேயே இருந்தது நம்மை காட்சிகளோடு ஒன்றிவிட வைக்கிறது. நாடகம் முழுவதும் ஒரு நடிகனைப் போலவே ஒளியமைப்பும் ஒரு பாத்திரமாகி நாடகம் முழுவதும் தொடர்கிறது. தனது ஒவ்வொரு படைப்புகளிலும் கண்ணுக்கு சட்டென புலப்படாத அரசியல் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பார் பிரளயன். இந்த நாடகத்திலும் அது தொடர்வதையும், அவை வெடிக்கும்போது பார்வையாளர்கள் அதிர்வதையும் அரங்கில் காணமுடிந்தது.

புதுவை பல்கலைக்கழகத்தின் தயாரிப்பில், 35 நாட்கள் உழைப்பில் பிரளயன் உருவாக்கிய இந்நாடகத்தில் இலங்கை, வங்கதேசம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் நல்ல தமிழில் பேசி நடித்ததை குறிப்பிட வேண்டும்.

நாடக அரங்கில் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னதைப் போல 2000 ஆண்டுகால தமிழ் வரலாற்றில், முதன் முதலாக முழுமையாக வந்திருக்கிற தமிழ் நாடகம் இது.

பின்குறிப்பு: அங்கவை, சங்கவை என்ற பாரி மகளிரை தனது படத்தில் கேவலமாக சித்தரித்த இயக்குனர் ஷங்கரும், அதற்கு வாயைப் பிளந்து சிரித்தபடி ‘தமிழ்ப்பணியாற்றி' துணைபோன பாப்பையா வகையறாக்களும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த நாடகத்தை எங்காவது பார்த்து, சாப விமோசனத்தை தேடிக் கொள்வார்களாக...

- எஸ்.கருணா
நன்றி:கீற்று

குஜராத் 2002 இனப்படுகொலை - ‘தெகல்கா’ புலனாய்வு முழு தொகுப்பு

தமிழில்: அ.முத்துகிருஷ்ணன்


நூலிலிருந்து:


‘தெகல்கா’ புலனாய்வு உண்மைகள் வெளிவந்ததும் உலகம் முழுவதிலிருந்தும் குடிமைச் சமூகத்தின் குரல்கள் உருப்பெறத் தொடங்கின. உயிரைப் பணயம் வைத்து ஆறு மாதங்கள் புலனாய்வை மேற்கொண்ட ஆஷிஷ் கேத்தன் மற்றும் ‘தெகல்கா’ குடும்பத்தினருக்கு-வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்கள், எழுத்தாளர்கள், போராளிகள் என பெருங்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்தது. நம் காலத்தின் உண்மையான நாயகர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். ஆம், அதிகாரத்துக்கு எதிராக கலகம் செய்யும் வீரர்கள்.

வேறு வகையில் பார்த்தால், இது யார் செய்திருக்கவேண்டிய வேலை? 2002 பிப்ரவரி இறுதியில் இனப் படுகொலை நடத்தப்பட்டது. அடுத்த ஆறுமாத காலத்தில் விசாரணைகள் நிகழ்ந்து, மறு விசாரணையும் நடந்து நவம்பர் 2003 வாக்கிலாவது அரசாங்கம் தனது தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டும். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள வாக்குமூலங்களை குஜராத் காவல் துறை அல்லவா பெற்றிருக்க வேண்டும்? இது போன்ற இனப்படுகொலைகளை செய்து வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். மறுபுறம் ‘பண்பாட்டுக் காவலர்’களைப் போல வலம் வருகின்றன. குருதி தோய்ந்த கரங்களால் கடவுளைத் தொழுதல், தேர்தலில் முழக்கமிடுதல் என ஒப்பனைகள் கச்சிதமாய் தொடர்கின்றன.

இவ்வளவு கொடூரங்கள் ஆதாரங்களுடன் வெளிவந்த பிறகும், மீண்டும் நரேந்திரமோடி வெற்றி வாகை சூடி பதவியில் அமர்ந்திருக்கிறார். இதில் வியப்படைவதற்கு ஏதும் இருக்கிறதா? எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. மதவாதத்தை கொள்கையாகக் கொண்டவர்கள், குஜராத் சமூகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அதற்கான சூழலை உருவாக்கி வருகிறார்கள். பால்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மருத்துவமனைகள் என அவர்களின் கரங்கள் நுழையாத இடமேயில்லை. 1985 முதல் நரோடாவிலும் கேதாவிலும் ஆயுதப்பயிற்சியளிக்கும் ‘ஷாகா’க்களை ஆர்.எஸ்.எஸ்.தொடர்ந்து நடத்தி வருகிறது. லத்தி கம்புகளை எறிந்துவிட்டு அவர்கள் தானியங்கி துப்பாக்கிகளை கையில் பிடித்தும் இருப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது.

தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வன்ம முகாம்களில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அடுத்த கட்டமாக இந்த முகாமில் பங்கு கொண்டவர்கள், குஜராத் அரசின் பல்வேறு துறைகளிலும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்த பிரதிகள் வரும் பலரும் இந்த முகாம்களின் அங்கத்தினரே ஆயுதங்களை வழங்கும் காவல் துறையினர், கொலைகாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு வழக்கறிஞர் எனப் பல வேடங்களை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள். இந்த மரண வியாபாரிகளுக்கு இந்திய முதலாளிகள் பக்கபலமாய் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பானி, ரத்தன் டாடா என இப்பெரும்படை மோடியுடன் அளவளாவியதை நாம் தொலைக்காட்சிகளில் கண்டோம். ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரும் நிதி வழங்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் ‘தெகல்கா’ தனியான திரையிடலை ஏற்பாடு செய்யலாம்.

சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள இந்த நஞ்சை எப்படி அப்புறப்படுத்துவது? தேர்தலுக்குத் தேர்தல் பா.ஜ.க.வை உக்கிரமாய் எதிர்த்து முழக்கம் போட்டால், மதவாதம் அழிந்துவிடுமா? மதவாத எதிர்ப்புப் பிரச்சாரம் ஊடக புகைப்பட வெளியீட்டால் நிறைவுறுமா? மதச்சார்பின்னை பேசுகிறவர்கள் மதவாதத்தை மிகவும் தட்டையாகப் புரிந்து கொண்டுள்ளார்களா? மதவாதத்தை எதிர்ப்பதற்கான பண்பாட்டுத் தளத்திலான வேலைத் திட்டம் ஏன் உருவாக்கப்படவில்லை? கே.என்.பணிக்கர், ராம் புன்யானி போன்று மனதின் அடியாழத்திலிருந்து தொடர்ந்து பேசுபவர்களின் வார்த்தைகளை நாம் வீணடித்து விட்டோமா? சாதி ஒழிப்பில் முனைப்பில்லாததால் தான் மத எதிர்ப்பை பெயரளவில் நிறுத்திக் கொள்கிறோமா? எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் நாம்?

மத வெறியின் ஆபத்தை உணராத பெரியாரின் வழித்தோன்றல்களாக கருதிக்கொள்ளும் திராவிடக் கட்சிகள், கூச்சநாச்சமின்றி மாறி மாறி பா.ஜ.க.வை தோளில் சுமந்து தமிழகத்தில் வளர்ப்பது சரிதானா?

இந்தப் பிரதிகள் தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் தான் துரிதமாக மொழியாக்கம் செய்யப்பட்டது. மதவெறியின் உண்மை முகத்தை நேரில் காணும் அரிய வாய்ப்பு மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறது. காலம் கனிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரதிகளில் கம்பீரமாய் வலம் வரும் பேராசிரியர் பன்துக்வாலா, காவல் துறை உயர் அதிகாரி ஆர்.பி.சிறீகுமார் ஆகியோர் நம்பிக்கையின் தூதர்களாகத் திகழ்கிறார்கள். இஷான் ஜாப்ரியின் துணைவி சக்கியா ஜாப்ரி, ‘தெகல்கா’ பதிவுகளுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருக்கிறார். இமயமலையில் பாறைகள் உருண்டதாக வெளிவந்த பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, வழக்கை தானே தாக்கல் செய்யும் உச்சநீதி மன்றம், ‘தெகல்கா’ புலனாய்வு மீது தன் பார்வையை பதிக்குமா? கோத்ராவில் இனப்படுகொலை செய்யப்பட்ட 2000 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அகதிகளாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை மீட்டெடுக்கப்பட வேண்டும்.

இந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க - http://www.anyindian.com/product_info.php?products_id=213001

வெளியீடு: வாசல் பதிப்பகம்

402, முதல் தெரு, வசந்த நகர்,
மதுரை-625003.
செல்: 9842102133
தலித் முரசு
203, ஜெயம் பிரிவு, சித்ரா அடுக்ககம்
9,சூளைமேடு நெடுஞ்சாலை,
சென்னை-600094.
பேசி:044-23745473

நன்றி:கீற்று