வெள்ளி, 30 அக்டோபர், 2009

யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை


வெங்கட் சாமிநாதனின் 39 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை புத்தக விமர்சனங்கள்.


"யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை - மேலோட்டமாகப் பார்க்கையில் புத்தக விமர்சனங்களாய் இருந்தாலும், அடியாழத்தில் தமிழ்நாட்டின் சமூக விமர்சனமாகவும் அமைகிறது. குறிப்பிட்ட தத்துவத்தின் அடிப்படையில் தம்மை வடிவமைத்துக் கொண்டதாய் பிரகடனம் செய்பவர்களிடம், அந்தத் தத்துவத்திற்கு சம்பந்தமே இல்லாத அல்லது தத்துவத்தைப் புரட்டிவிடுகிற படைப்பாற்றல் வெளிப்படுகிற ஆச்சரியத்தை நுணுக்கமாய்ப் பதிவு செய்கிறார் வெங்கட் சாமிநாதன். அவர்கள் மேற்கொண்ட தத்துவத்துடன் தான் உடன்பாடு கொள்ள முடியாததால், அவர்களின் படைப்பாற்றலைப் புறக்கணிக்கிற செயலை என்றுமே வெங்கட் சாமிநாதன் செய்வதில்லை என்பதுதான் வெங்கட் சாமிநாதனின் ஆளுமையின் அடையாளம். அந்த நேர்மை இலக்கிய சமூக உலகில் ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்" என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.

இக்கட்டுரைகள் கடந்த 40 வருடங்களாக அவ்வப்போது பத்திரிகைகள் கேட்க எழுதியவை என்று முன்னுரையைத் தொடங்குகிறார் வெ.சா. "இதுதான் என் தமிழ்நாடு. இங்கு நான் தொகுத்துள்ளவை அந்தப் புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல. என் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அதுதான் எனக்கும், என் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான் செய்து கொள்ளும் நியாயம்" என்று முன்னுரையை முடிக்கிறார்.

நூலாசிரியர்:வெங்கட் சாமிநாதன்

பதிப்பாளர்: எனிஇந்தியன்
பக்கங்கள்: 232
விலை: உருவா.120.00

புதன், 28 அக்டோபர், 2009

பேசாத பேச்செல்லாம்


தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துயரமும் இக்கட்டுரைகளை ரகசிய விசும்பல்களாகவும் ஒரு ரணத்தை அந்தரங்கமாக திறந்து பார்க்கும் செயலாகவும் மாற்றுகின்றன.

நூலாசிரியர்: ச.தமிழ்செல்வன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
விலை: 80.00 உருவா, இந்தியாவிற்கு வெளியே: 175.00,
வெ.ஆண்டு: டிசம்பர். 2007,
ISBNNumber : 978-81-89912-31-4

கன்யாவனங்கள்


70களுக்குப் பின் அரபு நாடுகளின் புதிய எண்ணெய் வளங்கள் உருவாக்கிய வேலை வாய்ப்புகளைத் தேடி மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஏராளமானோர் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் பாலை நிலத்தின் கடும் போராட்டங்களும் நவீனத்துவத்தின் வசதிகளும் மத ரீதியான சமூக அரசியல் அமைப்பின் கெடுபிடிகளும் நிறைந்த ஒரு புதிய எதார்த்தத்தை எதிர்கொண்டனர். இந்த எதார்த்தத்தினூடே மனித ஆசாபாசங்களின், ஒடுக்கப்பட்ட கனவுகளின், தீர்க்கமுடியாத பெருமூச்சுகளின் கேவல்களையும் வன்மங்களையும் சித்தரிக்கிறது கன்யாவனங்கள். செல்வமும் காதலும் காமமும் பாவமும் ஆபத்துகளும் சூழ்ந்த ஒரு உலகத்தின் வசீகரத்தையும் இருளையும் இந்நாவலில் சித்தரிக்கிறார் புனத்தில் குஞ்ஞப்துல்லா. முன்னணி மலையாள நாவலாசிரியரான புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் புகழ்பெற்ற படைப்பு இது.

ஆசிரியர்: புனத்தில் குஞ்ஞப்துல்லா
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
விலை: உருவா: 85.00 இந்தியாவிற்கு வெளியே: 190.00
வெ.ஆண்டு: டிசம்பர்.2007
ISBNNumber : 978-81-89912-41-3

நன்றி:உயிர்மை

மரணத்தின் வாசனை


போர் தின்ற சனங்களின் கதை


அதிகாரத்தின் பெருவாய் அப்பாவிகளின் உயிர் குடிக்க அலைகிறது. பிணங்களும் ரணங்களுமே இன்றைய ஈழத் தமிழனின் சொத்து. களமாடிச் சவமாகிக்கிடக்கும் தமிழச்சிகளின் பிணங்களைப் புணரும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூரம், ஹிட்லரின் நாஜிப் படையும் செய்யத் துணியாதது. இந்த உண்மைகளை வலியோடு பேசுகிறது த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை’ புத்தகம்.

-ஆனந்த விகடன்



இரண்டாம்பதிப்பு ஓவியர் ட்ராஸ்கி மருதுவின் ஓவியங்களோடு வெளியாகியிருக்கிறது.

த.அகிலன்

வடலி வெளியீடு
முதற்பதிப்பு 2009 ஜனவரி
இரண்டாம்பதிப்பு 2009 மே
ISBN: 978-81-908405-3-8
நன்றி:வடலி

நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புக்கள்..


அஜிதா - அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த மந்தாகினி நாராயணன் - குன்னிக்கல் நாராயணனின் மகளாக 1950 ல் கோழிக்கோட்டில் பிறந்தார்.சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.1968 முதல் 81 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.புல் பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1968 லிருந்து 77 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர். தற்போது அனேஷி வுமன் கௌன்சலிங் சென்டரிங் தலைவராக உள்ளார்.


எதிர் வெளியீடு

பக்கங்கள் 432
தமிழில்:குளச்சல் மு.யூசுப்

"ஈழம்: இனப்படுகொலைகளுக்குப் பின்னால்"


வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய கொடூர தாக்குதல்கள் வெற்றி பெற்றவர்களின் சாகசங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. மிக குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். வன்னி மக்களை மீட்டு சுதந்திரமளிப்பதற்காக என்ற பெயரில் சிறீலங்கா அரசு நடத்திய மிகக்கொடூரமான இராணுவ தாக்குதலின் முடிவில் வதைமுகாம்களுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள் 3 இலட்சம் தமிழ் மக்கள். வன்னி மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை உலகின் அதிகார மையங்களின் எல்லா கண்களும், கைகளும் வேடிக்கை பார்த்தன. வன்னிப் படுகொலைகள் திடீரென்று உருவானவையல்ல.




"ஈழம்"


இனப்படுகொலைகளுக்குப் பின்னால்
ஆசிரியர்.யோ.திருவள்ளுவர்

வெளியீடு: ஆழி பதிப்பகம்

பக்கங்கள் : 176



இந்நூல் கடந்த பத்து ஆண்டுகளின் ஈழப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட போர், போர் நிறுத்தம், சமாதான முயற்சிகள், படுகொலைகள், வன்னிப் படுகொலைகளின் துயரங்களையும், பேரழிவையும் விரிவாக பதிவு செய்கிறது. சிங்கள பேரினவாதத்தின் தந்திர நாடகங்களை, பிராந்திய, உலக வல்லரசுகள் வகித்த பங்கை, ராஜதந்திர சதித்திட்டங்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், சிறீலங்காவின் அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தின் ஏமாற்றுத்தனங்களையும், அவை உருவான பின்னணியையும் விவரிக்கிறது.

வடலி இணையக் கடையில் இந்நூல் விற்கப்படுகிறது. வடலியில் வாங்க இங்கே அழுத்துங்கள்


நூல் கிடைக்கும் இடங்கள்:

ஆழி பதிப்பகம்
12, பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி,
கோடம்பாக்கம், சென்னை- 600024
தமிழ்நாடு
தொலைபேசி: 91-44-4358 7585
மின்னஞ்சல்: aazhisales@gmail.com

நன்றி:ஆலமரம்

திங்கள், 26 அக்டோபர், 2009

சீனப் புரட்சி


நான்காயிரம் ஆண்டுகளாக அடக்குமுறையைத் தவிர வேறொன்றையும் அறிந்திருக்கவில்லை சீனா. வெகுண்டு எழுந்து சீனர்கள் போராட ஆரம்பிக்கும் ஒவ்வொரு சமயமும் அவர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டனர். சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும்.


சீனா ஒரு குடியரசாக மலர வேண்டும். சன் யாட் ஸென் கண்ட கனவு மாவோவால் மெய்ப்பிக்கப்பட்டது. "என் பின்னால் வா" என்று அந்தத் தேசத்தை தனக்குப் பின்னால் அணிதிரட்டிப் போராடினார் மாவோ. மக்களை உந்துசக்தியாகக் கொண்டு மாவோ நிகழ்த்திக் காட்டிய சீனப் புரட்சி அத்தேசத்தின் வரலாறை மாற்றியமைத்தது.

ஆசிரியர்: மருதன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 80         விலை: 25.00 உருபா

புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009



புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.



பொருளடக்கம்

தனி மனிதப் பதிப்புகள்

ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி

சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்

தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்

வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்

தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்

வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்

வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்

மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்

தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்

உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்

பொதுக் கட்டுரைகள்

பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்

ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்

சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி

மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு

தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி

சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி

தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்

இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்

நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா

நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்

தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா

காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்

நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்

மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்

கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்

வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )

கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்

கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்

பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி

தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்

கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்

நிறுவனம் சார்ந்த பதிப்புகள்

எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்

பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


தற்போது விற்பனையில்....



விலை : ரூ 95.00

பக்கங்கள் : 320

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924

e-mail : thamizhbooks@gmail.com

நன்றி: விருபா

வெள்ளி, 23 அக்டோபர், 2009

இஸ்லாமிய வாழ்வியல் புதினங்கள்-10 ஆண்டு

மணிமாறன்


வாழ்வின் முழுமையைச் சொல்வது நாவல். காவியங்களால் எட்ட முடி யாத மாபெரும் உயரத்தையும் எட்டு கிற நாவலின் கலைவடிவம் தத்துவம். நாவலுக்குள் கலை ரீதியான விவாதம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்து வமின்றி எந்த விவாதமும் இல்லை. எனவே தத்துவமின்றி நாவலுமில்லை. ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் கலை ரீதியான மாபெரும் வெளிப் பாடே நாவல். எல்லாவற்றையும் வர லாற்றின் முன் நிறுத்தி விசாரிக்கும் விஸ்தாரமான வெளிப்பாடு வடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது.

இவ்வகையில் இஸ்லாமிய மக் களின் கலாச்சார கூறுகளையும், தனித்த பண்பாட்டு அடையாளங்களை யும் தன்னுடைய ``ஒரு கடலோரக் கிரா மத்தின் கதை” யில் இருந்து தொடர்ந்து அக்கறையுடன் பதிவு செய்து வருபவர் தோப்பில் முஹமது மீரான். அவரு டைய இக்காலத்திய 2000 ஆவது ஆண்டுக்குப் பிந்தைய படைப்பு “அஞ்சு வண்ணம் தெரு”.

இஸ்லாமிய மரபுக் கதைகளை அஞ்சு வண்ணம் தெருவின் அழிவின் வழியாக எழுதிப் பார்த்திருக்கிறார் மீரான்.

நபீசா மன்ஸிலின் பெயரை தாருல் ஸாஹினா என்றாக்கிடும் பொழுதிற் கான இடைவெளிகளில் அஞ்சு வண் ணம் தெருவின் வரலாற்றை அழியாத வரலாற்றுக் கதைகளின் ஊடாக கடக் கிறார்.

மம்மதும்மா ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம், வெள்ளை பரங்கி யரை எதிர்த்து கிலாபத் போராட்டத் தில் மலபாரில் உயிரைத் துச்சம் என நின்று போராடிய அயம்மதாஜியின் வழித் தோன்றல் என்கிற புனைவு அவ ளுடைய மனநிலையை வாசகனுக் குள் கத்தியென இறக்குகிறது.

மீரானே நாவலில் சொல்வது போல இந்த நாவல் வரலாற்றை ஞாபகப்படுத் திடும் செயல். `` வரலாறு ஆபத்துக் கட்டங் களில் கையெட்டிப் பிடிக்க கூடிய நினைவு களாகும் என்பது அவர் களுக்குத் தெரி யாது. பன்னாட்டு ஏகாதிபத்திய ஆதிக் கம் நடக்கும் இன்றைய ஆபத்தான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதி ராகப் போராடுவதற்கு நமக்கு சில நினைவுகள் தேவைப்படுகின்றன.

பின்பகுதி முழுக்க நிகழ் காலத் தில் இயங்குகிறது. தவ்ஹீதுக்களுக் கும் சுன்னத்துல் ஜமாஅத்காரர் களுக்குமான சண்டை சச்சரவுகளாக நீடிக்கிறது. இஸ்லாமியச் சமூகத்திற் குள் தங்களுடைய வழிபாட்டு முறை குறித்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உள் முரண்பாடுகளை நாவலின் மையமாக்கி கடக்கிறது.

தொப்பி போடணுமா - போடக் கூடாதா விரல்ஆட்டித் தொழனுமா அல்லது விரல் ஆட்டக் கூடாதா? என்று இன்றைக்கு தமிழகத்து இஸ் லாமியத் தெருக்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தத்துவச் சண் டையை காட்சிப் படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத் தளத்தில் கொண்டாடியிருக்கிறார். அதற்கு வேறு எதுவும் முக்கிய கார ணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. நாவலின் பல இடங்களில் “பெட்ரோல் துட்டு தவ்ஹீது காரங்க கிட்ட விளையாடுகிறது. வெளி நாட்டுப் பணத்துல இங்க கலவரம் பண்ணிக் கிட்டு திரியிறாங்க” என்கிற ஜெயமோகனின் உள் குரலையே மீரானும் எழுதிச் செல்வது தான்.

நாவலை வாசித்து முடித்த நீண்ட நேரத்திற்குப் பிறகும் நம்முடைய மனங்களில் வன்கொலையாகப் பலியிடப்பட்ட தாயம்மாவும், மெஹ் ராஜ் இரவின் கவித்துவ வரிகளை தந்து சென்ற ஆலிப்புலவரும், அகற் றப்பட்ட வேப்பமரமும், மைதீன் பிச்சை மோதீனும், தைக்காப் பள்ளி யும், விஷப்பற்களை நீக்கிய பின் தாயோடு நிற்கும் பாம்பும் நிழலாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

400 பக்கங்களுக்கும் குறைவாக எழுதுவது எல்லாம் நாவலே அல்ல. நாவல் என்பது விஸ்தாரமான பரப்பு. வரலாற்றின் முன் ஞாபகங்களை வைத்து விளையாடும் மொழி விளை யாட்டு நாவல் என்று எழுத்தாளன் மிரட்டப்பட்டுக் கொண்டிருந்த நாட் களில் எழுதவந்தவர் கீரனூர் ஜாகிர் ராஜா.

அவருடைய மீன்காரத்தெருவும், கருத்த லெப்பையும் அதுவரை தமிழ்ச் சமூகம் அறிந்திராத இஸ்லா மிய கலாச்சாரத்தைப் பதிவு செய் தன. இரட்டை விரல்களுக்குள் மட் டும் அடங்கிவிடக் கூடிய வடிவில் மிக விரிவான தனித்த இஸ்லாமிய பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை அவற்றில் அவர் பதிவு செய்திருந் தார். குறிப்பாக தமிழ் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களோடு இயைந்து கிடந்தது நாவலுக்குள் விரிந்த வாழ்வு.

ஜாகிரின் மூன்றாவது நாவல் துருக் கித் தொப்பி. வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் கதையின் ஊடாக மனித மனங்களுக்குள் ஊறிக் கிடக்கும் வக் கிரம், காமம், அன்பு, இயலாமை, குற்ற வுணர்ச்சி என யாவும் பதிவாகிறது.

கே.பி.ஜே., அல்லாவுத்தலா, ரகம் மது என தொடரும் ஆண் மனங்களின் வழியாக மர்லின் மன்றோ, காம புத் தகங்கள், அரசியல் வெறி, சீட்டுக் கச் சேரி, பெண்கள் சகவாசம், வெட்கமும் குற்றமும் உணராத காமம் என மனித மனங்களின் சகிக்க முடியாத குரூரம் பதிவாகியுள்ளது.

தான் பிள்ளை பெற்ற நாளில் வந்து தொலைத்த அம்மைநோயால் பிள்ளைக்கு பால் தர முடியாத துய ருக்கு ஆளான நூர்ஜஹான் அதற்கு காரணமாயிருந்த மூத்த பிள்ளை ரகமதுல்லாவை வாழ்நாள் முழுக்க திட்டியபடியே இருக்கிறாள். தன் துய ரைத் தீர்க்க ஏழுவயது வரை தன்னு டைய இரண்டாவது மகன் இக்பாலுக்கு பால் புகட்டிக் கொண்டேயிருக்கிறாள்.

நாவல் சமகால அரசியல் வரலாற் றின் வழியே தான் நகர்த்தப்படுகிறது. தமிழ் இஸ்லாம் எனும் கலாச்சார வெளியைத் தான் நாவல் முழுக்க காட் சிப்படுத்தியிருக்கிறார் ஜாகிர்.

நாவலில் ஈஷா நபி தான் இயேசு என்கிற விளக்கமும், கிறிஸ்தும் இறைத் தூதரே என நிறுவியிருப்பதும் அந்த சர்ச் வாசலில் ரகமதுல்லா இயேசுவுடன் உரையாடுவதும் காவியக் காட்சிகள். தன் வயதில் ஏற்படக்கூடாத வலியை அம்மாவின் கற்பு குறித்த குழப்பத்தை அப்பாவுக்கு கடிதமாக எழுதி கடிதத் தோடு அம்மாவிடம் மாட்டிக் கொள் ளும் ரகமதுல்லா ஒரு விசித்திரமான பாத்திரப்படைப்பு.

எல்லா மாபெரும் இலக்கியங் களும் கச்சிதமாக முடிவதில்லை. எதையோ வாசகனுக்குச் சொல்லி, சொல்லாமல் விட்டவற்றை தேடியலை வாயாக என கதவைத் தான் திறந்து விட்டிருக்கின்றன.

அப்படித்தான் துருக்கித் தொப்பி யின் முடிவும் அமைந்திருக்கிறது. நாவ லைப் படித்து முடித்த பிறகும் வயதை யும் மீறி ரோட்டில் கிடந்த கல்லைத் தூக்கி எறிந்தேன். அதுயார் மேல் விழுந் ததோ தெரியவில்லை. கல்லடிப்பட்ட வர் கே.பி.ஜேவாகக் கூட இருக்கலாம்.

மற்றொரு மிக முக்கியமான இஸ் லாமிய கலாச்சார வாழ்வை பதிவு செய்த மிக முக்கிய ஆவணம் சல்மா வின் `` இரண்டாம் ஜாமங்களின் கதை யாகும்”. மிகுந்த சவாலான களத்திற் குள் நாவல் பயணிக்கிறது. இரண்டாம் ஜாமத்தின் பெண் உடலுக்குள் இயங் கும் பெரு மூச்சும், கண்ணீரும், பரவச மும், வேதனையும், வலியும் நாவலின் வரிகளுக்குள் கேட்டபடி இருக்கிறது. சமீபத்தில் ஆங்கில, மலையாள மொழி பெயர்ப்பு கண்டிருக்கிறது இரண்டாம் ஜாமங்களின் கதை.

92 டிசம்பருக்கும், செப்டம்பர் 11க்கும் பிறகான இஸ்லாமிய தெருக்களின் மன நிலையையும் ரயில்வே ஸ்டேஷன் களில் தன் மதம் சார் அடையாளத்தால் கருப்பு அங்கி நீக்கி பார்க்கப்படும் பெண்களின் துயரையும், வலியையும் இனிமேல் தான் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வன்முறையையும் இஸ்லாத்தையும் ஒரே கோட்டில் இணைத்துப் பார்க்கிற மனங்களை ஊடறுக்கும் இலக்கியப் பதிவு எப் போது உருவாகுமோ தெரியவில்லை.

நன்றி:தீக்கதிர்

புதன், 21 அக்டோபர், 2009

மணல் வீடு- நாடகத் தொகுப்பு


மணல்வீடு, பசுமை என்னும் தாய்மை, முளைப்பாரி என்ற மூன்று நாடகங்களின் தொகுப்பு நூல் இது. ஆசிரியரின் முதலாவது நாடகத் தொகுப்பாகும். இத்தொகுப்பில் உள்ள நாடகங்கள் சுற்றுச் சூழலைப் பற்றியும், மக்கள் ஒற்றுமை, மனித நேயம் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றன


எழுத்தாளர் / தொகுப்பாளர் : சுப்ரபாரதிமணியன்

பதிப்பு : முதற் பதிப்பு (2005)
விலை : 30 .00/உரூபா
பிரிவு : நாடகங்கள்
பக்கங்கள் : 80


பதிப்பகம் : கௌதமராஜன் வெளியீடு
                        "புதுயுகம்" நடராஜன்
முகவரி : 24, பாட்டை வீதி

மீனாட்சிப்பேட்டை
குறிஞ்சிப்பாடி 607302
கடலூர்.

மாவோ


அடக்குமுறையும் மிருகத்தனமும் தீராத அடிமைத்தனமும் நிறைந்தது சீனர்களின் வரலாறு. கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டு கால மன்னர் ஆட்சி. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் என்று மாறி மாறி சீனாவைத் துண்டாடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. சீனாவின் வரலாறை மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் தன் போர் முரசைக் கொட்டினார் மாவோ. என் பின்னால் வா என்று சீனாவைப் பார்த்து கம்பீரத்துடன் அழைப்பு விடுக்கும் தீரமும் துணிச்சலும் மாவோவிடம் இருந்தது. தேசமும் அவர் பின்னால் அணி திரண்டது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான, நிலப்பிரபுக்களுக்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் போராட்டம் மாவோவின் வழிகாட்டுதலுடன் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஆட்சி முதன் முறையாக அங்கே மலர்ந்தது. சீன சரித்திரத்தில் எந்தவொரு தனி மனிதனும், எந்தவொரு கட்சியும், எந்தவொரு குழுவும் இதுவரை இத்தகைய சாதனையை நிகழ்த்தியது கிடையாது.


மிக தெளிவான அரசியல் கொள்கை. தீர்க்கமான போர் தந்திரம். அசரவைக்கும் மக்கள் பலம். இந்த மூன்று ஆயுதங்களைப் பயன்படுத்தி மாவோ நிகழ்த்திக் காட்டியப் புரட்சி, சீனாவை முதன்முறையாக ஒரு புதிய திசையில் செலுத்தியது. சீன வரலாற்றில் மட்டுமல்ல உழைக்கும் மக்களின் வரலாற்றிலும் மாவோ ஒரு வீர சகாப்தம்.

சீன புரட்சியை கண்முன் நிருத்தும் இந்நூல் உலக சரித்திரத்தில் மாவோவின் இடத்தை திட்டவட்டமாக சுட்டிக்காட்டவும் செய்கிறது.

ஆசிரியர்-மருதன்
வெளியீடு,
கிழக்கு பதிப்பகம்.
பக்கம்:216   விலை:100.00/உரூபா

உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம்


ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர். முகமது நபியின் கடுமையான எதிரியாக, அவரைக் கொலை செய்யும் வெறியுடன் அலைந்துகொண்டிருந்தவர், முகமதுவை நேரடியாகக் காணும்போது மனம் மாறி, அவருடன் சேர்கிறார். பின் நபியின் அத்தனை போர்களிலும் பங்கேற்கிறார். அவரது மறைவுக்குப் பின், முதலாம் கலீஃபா அபுபக்கரின் பக்கபலமாக இருக்கிறார்.


ஆட்சி உமரிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர் களிப்படையவில்லை. கிழிந்த, ஒட்டுப்போட்ட ஆடைகளையே அணிகிறார். மக்கள் குறையைத் தீர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார். கஜானாவிலிருந்து தன்னிஷ்டத்துக்குப் பணம் எடுத்துக்கொள்வதில்லை. கலீஃபாவாக, சுல்தானாக அவர் ஆண்ட ராஜ்ஜியம் விரிந்து பரந்திருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் அவரிடம் இருந்தது கடன்கள் மட்டுமே. தொழுகை நேரத்தில் எதிரி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிர்விடும் உமர் தன் கொலையாளிக்குக் கருணை கேட்கிறார். வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில் மலையாளத்தில் நூறநாடு ஹனீஃபால் எழுதப்பட்ட இந்தப் புதினத்தை நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதினம் என்பதற்கு மேலாக, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட வரலாறாகவே இதனைக் கொள்ளலாம்.
நன்றி: சாய்

கிழக்கு பதிப்பகம் வெளியீடு,
விலை= 175-00/உருபா

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அயர்லாந்து 800 ஆண்டுகால புரட்சி..



என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். 


ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.


புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.


அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.

தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!

இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.

அல்ஜீரியா



அல்ஜீரியப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அது பற்றி எழுதியும் பேசியும் வந்த இரு பெரும் ஃபிரெஞ்சு எழுத்தாளர்கள், அல்பேர்ட் காம்யு மற்றும் ழான் பால் சார்த்தர்.


முதலில், அல்பேர்ட் காம்யு (Albert Camus). இவர் அல்ஜீரியாவில் பிறந்தவர். தத்துவம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வம் செலுத்தியவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கையை மிகச் சாதுரியமாக ஒதுக்கித்தள்ளுகிறார் காம்யு. ஃபிரெஞ்சு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடும் எஃப்.எல்.என். இயக்கத்தை அறிவுஜீவிகள் யாரும் ஆதரிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறார். அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறார்.

காம்யு முன்வைக்கும் தீர்வு இதுவே. ஃபிரெஞ்சு மக்களோடு அல்ஜீரிய முஸ்லீம்கள் கைகோர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுடன் ஒத்துப்போகவேண்டும். அதைவிட்டுவிட்டு கொடிபிடித்து போராடுவதும் கோஷம் போடுவதும் பயன் தராது. அல்ஜீரியா விடுதலைப் பெறவேண்டும் என்னும் கோஷம் உணர்ச்சிமயமானது. யதார்த்தமானது அல்ல. ஃபிரெஞ்சு ராணுவத்தின் சித்திரவதைகளை சிறிது காலம் கண்டித்துப்பேசிய காம்யு தன் இறுதி காலத்தில் அதையும்கூட நிறுத்திக்கொண்டார்.

ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre) 1929 முதல் 1931 வரை ஃபிரெஞ்சு ராணுவத்தில் கட்டாயப் பணியாற்றியவர். அரசியல் போக்குகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த சார்த்தர், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்படுகிறார். போராட்டத்தின் நியாயத்தைப் புரிந்துகொண்டு வெளிப்படையாக ஆதரிக்கவும் செய்கிறார். எரிச்சலைடந்த ஃபிரெஞ்சுக்காரர்கள் சிலர் அவர் வீட்டு வாசலில் வெடிகுண்டு வைக்கிறார்கள். சார்த்தரின் சீற்றம் அதிகரிக்கிறது. ஒடுக்குமுறையை கையாளும் ஐரோப்பியரைக் கொன்றால் தவறே இல்லை என்று ஒரு புத்தகத்தின் முன்னுரையில் எழுதினார். தன் இறுதி காலம் வரை பல்வேறு அரசியல் போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கும் இலக்கியத்துக்கான நோபல் அறிவிக்கப்பட்டது. சார்த்தர் மறுத்துவிட்டார்.

ஒரே காலகட்டம். ஒரே போர். காம்யு பிரான்ஸை ஆதரித்திருக்கிறார். சார்த்தர், அல்ஜீரியாவை. காலனியாதிக்கத்தைக் கொண்டாடும், நியாயப்படுத்தும் வழக்கம் பல முக்கிய எழுத்தாளர்களுக்கு இருந்திருக்கிறது. Evelyn Waugh எழுதிய Waugh in Abyssinia சட்டென்று நினைவுக்கு வருகிறது. இத்தாலியர்களின் ஆக்கிரமிப்பு அபிசீனியாவுக்குத் தேவை என்று காலனியாதிக்கத்தை வரவேற்று எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தப் புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

1) The Torture of Algiers, Adam Shatz

2) My Encounter with Sartre by Edward Said
thanks for maruthan

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

கெரில்லாக்கள் எப்படி உருவாகிறார்கள்?


ஒரு கெரில்லா இயக்கத்தை ஆரம்பிப்பது சிரமமானது. அதைவிட சிரமமானது இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது. தொடர்ந்து நடத்துவதைக் காட்டிலும் சிரமம் தரக்கூடியது புரட்சி நடத்தி வெற்றி பெறுவது. வெற்றி பெறுவதைக் காட்டிலும் சிரமமானது எது தெரியுமா? வெற்றிக்குப் பிறகும் புரட்சியைத் தொடர்வது.

The Battle of Algiers என்னும் ஃபிரெஞ்சுத் திரைப்படத்தில், FLN (National Liberation Front) இயக்கத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சக போராளியிடம் கூறும் வாசகம் இது. இன்று காலை, யுடிவி தொலைக்காட்சியில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டது. ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கும் (பிரான்ஸ்) கெரில்லா போராளிகளுக்கும் (FLN) இடையில் நடைபெறும் யுத்தங்களின் தொகுப்பே இப்படம். நவம்பர் 1954ல் ஆரம்பித்து டிசம்பர் 1960 வரை அல்ஜீர்ஸில் (அல்ஜீரியாவின் தலைநகரம்) நடைபெற்ற போராட்டங்களை கண்முன் நிறுத்துகிறது இந்தப் படம்.

1830ல் ஃபிரெஞ்சுப் படை அல்ஜீர்ஸை நெருங்கியது. நகரம் சூறையாடப்பட்டது. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. ஃபிரெஞ்சுக் கொடியை பறக்கவிட்டு வெற்றி வெற்றி என்று ராணுவத்தினர் கொண்டாட ஆரம்பிப்பதற்குள், பாரீஸில் பத்தாம் சார்லஸ் மன்னர் தூக்கியெறியப்பட்டிருந்தார். அவர் உறவினர் லூயி ஃபிலிப் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணுவத்தினருக்குக் குழப்பம். இப்போதுதான் அல்ஜீரியாவை சுற்றிவளைத்திருக்கிறோம். இந்த நேரம் பார்த்தா ஆட்சி மாறவேண்டும்? பாரீஸில் பெரிய அளவில் விவாதம் கிளம்பியது. அல்ஜீரியாவை என்ன செய்வது? ஆக்கிரமிக்க வேண்டாம் விலகிவிடலாம் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டனர். எதற்கு வம்பு? ஆக்கிரமிப்பைத் தொடங்கிய முந்தைய மன்னரை மக்கள் தூக்கியடித்துவிட்டனர். அதே முடிவை நாமும் எடுத்தால் ஆபத்து அல்லவா?

எதிர்பாராத வகையில் புதிய மன்னர் அல்ஜீரிய ஆக்கிரமிப்பைத் தொடரலாம் என்றே முடிவு செய்தார். இப்போதுதான் நுழைந்திருக்கிறோம், உடனே விலகினால் நமக்குத்தான் சேதம் அதிகம் என்று வியாக்கியானம் கொடுத்தார் மன்னர். ராணுவத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டால் நாளை ஊர், உலகம் என்ன சொல்லும்? சுண்டைக்காய் அல்ஜீரியாவிடம் பயந்து பின்வாங்கிவிட்டோம் என்று ஏளனம் செய்யாதா? மாமன்னர் நெப்போலியன் ஆண்ட மாபெரும் ஃபிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்துக்கு அவமானத்தைப் பெற்றுத்தரலாமா? ஆகவே, எனதருமை மக்களே, இந்த ஆக்கிரமிப்புக்கு உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். 1834ல் பிரான்ஸ் அல்ஜீரியாவை முறைப்படி (என்றால் முறையற்ற முறையில்) தனது காலனியாக இணைத்துக்கொண்டது. அப்போது அல்ஜீரியாவில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியன்.

இந்தப் பின்னணியில் விடுதலைக்கான வேட்கையை மக்களிடையே தூண்டிவிடும் காரியத்தில் இயங்குகிறது எஃப்.எல்.என். இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடத்திவைப்பதில் ஆரம்பித்து மக்களுக்குப் பாதுகாப்பு தருவதுவரை பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டால் கில்லடினுக்குத் தலையைக் கொடுத்துவிடவேண்டும் என்பதால் பதுங்கிப் பதுங்கிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது இக்குழு.

தகுந்த இளைஞர்கள் தேடிப்பிடிக்கப்படுகிறார்கள். சிறுவர்கள் உளவு கண்டறிந்து சொல்கிறார்கள். வெள்ளை முக்காடு அணிந்த பெண்கள் ஆயுதங்கள் கடத்துகிறார்கள். தாக்குதல்கள் ஆரம்பிக்கின்றன. யாரைக் கொல்லவேண்டும் என்பதை தலைமை முடிவு செய்யும். தனியாக அகப்படும் ஃபிரெஞ்சு ராணுவ வீரர்கள் முதலில் பலியாகிறார்கள். நகரம் முழுவதும் படுகொலைகள் ஆரம்பமாகின்றன.

ஃபிரெஞ்சு ராணுவம் நகரத்தை சுற்றி வளையம் ஒன்றை ஏற்படுத்துகிறது. ராணுவத்தினர் குவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு தெருமுனையிலும் பாதுகாப்பு அரண். பரிசோதனை இல்லாமல் ஒருவரும் தெருவைக் கடக்கமுடியாது. கெரில்லா குழு புதிய வியூகம் ஒன்றை அமைக்கிறது. கொல்லும் வேலை ஒருவருக்கு அளிக்கப்படும். பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே துப்பாக்கியை மறைத்துவைக்கும் பணி இன்னொருவருக்கு. பரிசோதனை முடிந்து வெளியே வரும் நபருக்கு துப்பாக்கியைக் கொண்டுபோய் சேர்க்கும் வேலை மூன்றாவது நபருக்கு. கொல்லப்படும் ஃபிரெஞ்சு வீரரிடம் இருந்து ஆயுதம் பறிமுதல் செய்யப்படுகிறது.

அடுத்த கட்டம், வெடிகுண்டு தாக்குதல். குண்டுகள் வைக்கும் பணி பெண்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. நீளமான தலைமுடியைக் கத்தரித்துக்கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொண்டு, பிரெஞ்சுப் பெண்களைப் போல் குட்டைப் பாவாடை, மேல் சட்டை அணிந்துகொண்டு தோள்பையுடன் கிளம்புகிறார்கள் பெண்கள். பையில் குண்டு. ஒருவர் விமான நிலையத்தில் பையைக் கொண்டுபோய் வைக்கிறார். இன்னொருவர், மதுபான விடுதியில். மூன்றாமவர், சந்தையில். மூன்றும் அடுத்தடுத்து வெடிக்கின்றன. பிரெஞ்சு மக்கள் அதிக அளவில் கொல்லப்படுகிறார்கள்.

கெரில்லாக்கள் எதிர்பார்த்தபடியே அல்ஜீர்ஸீல் வசிக்கும் ஃபிரெஞ்சு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்களை நம்பித்தானே இங்கே குடிபெயர்ந்தோம். எங்கள் உயிருக்கு உங்களால் உத்தரவாதம் அளிக்கமுடியாதபோது நாங்கள் ஏன் இங்கே இருக்கவேண்டும்? பாரீஸிலும் மக்கள் கேள்விகேட்க ஆரம்பிக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கத்துக்கு அதிருப்தி. கூடுதலாக, எரிச்சல். ஒரு காலனியை கட்டிக்காப்பது லேசான செயல் அல்ல என்பதை அவர்கள் உணர்கிறார்கள். ஆனாலும், பிடிவாதமாக கூடுதல் துருப்புகளை அனுப்புகிறார்கள். தீவிரவாதிகளை உடனே நசுக்குங்கள். விடுதலைப் போராட்டத்தை முடக்குங்கள்.

மூர்க்கத்துடன் எஃப்.எல்.என் தலைமையைத் தேட ஆரம்பிக்கிறது ஃபிரெஞ்சுப் படை. குத்துமதிப்பாகப் பலரை பிடித்துச்சென்று சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார்கள். சொல்லு, எங்கே உன் தலைவர்? உங்கள் நபர்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள்? மின்சாரம் பாய்ச்சுகிறார்கள். தலைகீழாக நிற்கவைத்து அடிக்கிறார்கள். உடலில் துளை போடுகிறார்கள்.

இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருகின்றன. மறைவிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தலைமை. நான்கைந்து பேரே இறுதியில் எஞ்சுகிறார்கள். என்னை விடுங்கள் நான் சென்று தாக்குகிறேன் என்று ஒரு போராளி கண்கள் சிவக்க சொல்லும்போது, மூத்தவர் அவரைச் சாந்தப்படுத்துகிறார். நாமும் உயிருடன் இல்லாவிட்டால் இயக்கம் அழிந்துவிடும். தலைவர்கள் என்பதற்காக அல்ல, இயக்கத்துக்காகவது நாம் நம்மைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கடுமையான அடக்குமுறையால் 1860ல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இயக்கம் செத்துப்போகிறது. அப்பாடா கெரில்லாக்கள் ஒழிந்தார்கள் என்று நிம்மதியடைகிறது ராணுவம். இரண்டு ஆண்டுகள் அல்ஜீரியாவில் சிறு சலனமும் இல்லை. 1962ல் மீண்டும் கலகம் தொடங்குகிறது. திகைத்து நின்றது பிரான்ஸ். முதல் கல்லை வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்கள் தெருவில் இறங்கி கூச்சல்போட்டது எப்படி என்று தெரியவில்லை. சுதந்தரம் வேண்டும், ஃபிரெஞ்சுப் படையே வெளியே போ என்ற சிறுவர்களும் சிறுமிகளும் எப்படி கோஷமிட்டார்கள் என்று தெரியவில்லை. சட்டையை, கந்தல் துணியை, பர்தாவை கிழித்து, தேசியக்கொடிகளை உருவாக்கிக்கொண்டார்கள். முன்வரிசையில் இருந்தவர்கள் செத்து விழும்போது, அடுத்து வரிசை மக்கள் கொடியை ஏந்தியபடி முன்னால் வந்து நின்றார்கள். டாங்கிகளை உருட்டிக்கொண்டு வந்தது ராணுவம். விமானங்களை தலைக்கு மேலே பறக்கவிட்டு பயமுறுத்தியது. கண்டவுடன் சுட உத்தரவு போட்டது. முடியவில்லை. இனி தாங்காது என்னும் நிலையில் ஜூலை 5, 1962ல் ஃபிரான்ஸ் அல்ஜீரியாவைவிட்டு ஓடிப்போனது.

கறுப்பு வெள்ளையில் ஓடும் இந்தப் படம் 1966ல் வெளிவந்தது. திரைக்கதைக்காகவும் யதார்த்தமான பாத்திரப் படைப்புக்காகவும், காட்சியமைப்புகளோடு கலந்து நிற்கும் இசைக்காகவும் இன்றுவரையில் பெரிதும் சிலாகிக்கப்படுகிறது இப்படம். மேம்போக்காகப் பார்த்தால் இது கெரில்லா போராளிகளுக்கு ஆதரவான படம் போல் தோன்றலாம். உண்மை அதுவல்ல. சாகஸக்காரர்களாகவோ கதாநாயகர்களாகவோ எஃப்.எல்.என் இயக்கத்தினர் காண்பிக்கப்படவில்லை. அதே போல், ஃபிரெஞ்சு ராணுவத்தினரையும் வில்லன்களாக உருமாற்றவில்லை இப்படம். அல்ஜீர்ஸ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களையும் சித்திரவதைகளையும் ஏற்றுநடத்தும் ஃபிரெஞ்சு உயர் கமாண்டர் சாந்தமான முகபாவத்துடன் காட்சியளிக்கிறார்.

தீவிரவாதிகளைக் கொல்கிறோம் என்னும் பெயரில் அப்பாவி மக்களைக் கொல்வது, சித்திரவதை செய்வது தவறில்லையா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அந்த அதிகாரி அமைதியான குரலில் அளிக்கும் பதில் இது. போரில், சரி தவறு என்று எதுவும் இல்லை. சித்திரவதை செய்வதை நம் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். நாங்கள் செய்வது விசாரணைதான். அதில் சிலர் இறக்க நேரிடலாம். ஒன்றும் செய்வதற்கில்லை. உங்களுக்கு வெற்றி வேண்டுமானால் எங்களை நச்சரிக்காமல் இருங்கள். வழிமுறைகள் பற்றி கவலைப்படவேண்டாம்.

கெரில்லாக்களின் நீதியும் இதுவேதான். ஆக்கிரமிப்பாளர்கள் ஆயுதம் ஏந்துவதால்தான் நாங்களும் ஆயுதம் ஏந்துகிறோம். அவர்கள் எங்களை மட்டும் கொல்வதில்லை. எங்கள் மக்களையும் சேர்த்தே கொல்கிறார்கள். நாங்கள் எங்கள் எதிரிகளை மட்டும் கொல்வதில்லை. எதிரி தேசத்து மக்களையும் சேர்த்தேதான் கொல்கிறோம். எங்கள் போராட்ட முறையை எங்கள் எதிரிகளே தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பாளர்கள் மறைவதில்லை. ஆகவே, கெரில்லாக்களும்
நன்றி: மருதம்

சனி, 17 அக்டோபர், 2009

எரியும் பனிக்காடு: தேயிலைத் தோட்டங்களின் கதை



முதல் உலகப் போர் நடைபெற்றது கருப்பன், வள்ளி இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா பிரிட்டனின் காலனி தேசமாக இருப்பது தெரியாது. இந்திய தேசிய காங்கிரஸ் தெரியாது. வங்கப் பிரிவினை தெரியாது. காந்தி தெரியாது. தென் ஆப்பிரிக்கப் போராட்டம் தெரியாது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், சைமன் கமிஷன், பகத் சிங், தண்டி யாத்திரை எதுவும் தெரியாது. அவர்கள் வசிக்கும் மயிலோடை கிராமம் தெரியும். மற்றபடி, திருநெல்வேலியைக்கூட முழுவதுமாக அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை.

நாங்கள் ஏழைகள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள். விலங்குகளுக்குச் சமமாகவோ அல்லது விலங்குகளை காட்டிலும் கீழானவர்களாகவோ சமூகத்தால் மதிக்கப்படுகிறோம். எங்களுக்குப் பட்டினி பழக்கமாகிவிட்டது. அவமரியாதை பழக்கமாகிவிட்டது. ஏ நாயே என்று அழைத்தால் உடலை குறுக்கிக்கொண்டு, சொல்லுங்க சாமி என்று ஓடிவர பழகிவிட்டது. தேங்காய் மூடியில் தேநீர் குடிக்கிறோம். வாரம் ஒரு முறையாவது பொங்கிச் சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வோம்.

பஞ்சம் பிழைக்க வழி தெரியாமல் கருப்பன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஓர் அழைப்பு வருகிறது. மலைக்கு வா, அங்குள்ள வெள்ளைக்கார துரைகள் நல்லவர்கள். கைநிறையச் சம்பாதிக்கலாம். இலவச மருத்துவ சேவை கிடைக்கும். தவிரவும், மரியாதையுடன் நடத்துவார்கள். தனியே வருவதா என்று யோசிக்காதே, உன் மனைவியையும் அழைத்துவா. போய் வரும் செலவு என்னுடையது. இந்தா பிடி, இது உன் செலவுக்கு. நீ மட்டுமல்ல, உன் போன்ற பலரும் இந்தக் கிராமத்தில் இருந்து வரவிருக்கிறார்கள். தயங்காதே.

கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு இருவரும் வந்து சேர்கிறார்கள். ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிந்துவிடுகிறது. வேலை ஆரம்பமாகிறது. கருப்பனுக்கு விறகு வெட்டும் பணி. வள்ளி தேயிலை கிள்ளவேண்டும். தீப்பெட்டி அளவே உள்ள தகர வீடு. அதையும்கூட இன்னொரு குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆளுக்கொரு போர்வை. மழையில் நனைந்துவிட்டால், அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மாற்று போர்வை கிடைக்காது. பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம்.

சம்பளம் எவ்வளவு சாமி என்று கேட்டால் முகத்தில் குத்து விழும். பிச்சைக்கார நாயே, உனக்கெல்லாம் கணக்கு வழக்கு சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா? சொன்னாலும் புரியவா போகிறது? அவர்களாகவே ஒரு தொகையை மாதாமாதம் பதிவேட்டில் எழுதிக்கொள்வார்கள். வந்து சேர்ந்த செலவு, முன்பணம், சமையல் சாமான் வாங்க கொடுக்கும் வாராந்திர பணம், கம்பளிக்கான பணம் என்று ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக கழித்துக்கொண்டே வருவார்கள். ஆண்டு இறுதியில் அழைப்பார்கள். உன்னுடைய மொத்த சம்பாத்தியம் எழுபது ரூபாய். கடன் அறுபது ரூபாய் கழிந்து பத்து ரூபாய் மிச்சமிருக்கிறது. இந்தப் பணத்தைக் கொண்டு ஊருக்குப் போகமுடியாது. இன்னொரு வருஷம் வேலை செய். போ.

பெண்கள் தேயிலைக் கொழுந்துகளைக் கிள்ளிக்கொண்டிருக்கும்போது, வெள்ளைக்கார துரைமார்கள் பெண்களின் கன்னத்தைப் பிடித்து கிள்ளுவார்கள். சரி போகட்டும் என்று பொறுத்துக்கொண்டால், கணக்கில் வரவு கூடும். இலை கிள்ளவேண்டாம். வள்ளியைப் போல் அழுதுபுரண்டு, அலறினால், கூடைக்கூடையாக இலைகள் கிள்ளினாலும் வரவு இருக்காது. அவமானமும் அடிகளும் கிடைக்கும்.

ஓடிப்போகலாம் என்று உள்மனம் படபடக்கும். சாத்தியமில்லை. எஸ்டேட் அதிகாரிகளிடம் இருந்து ஒரு வேளை தப்பினாலும் விலங்குகளிடம் இருந்து தப்பமுடியாது. அப்படியே தப்பினாலும் மலை நெடுக அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அரண்களில் ஏதாவது ஒன்றில் தடுத்துப் பிடித்துவிடுவார்கள். அனைத்தையும் கடந்து நடந்தும் ஓடியும் ஊருக்குப் போய்விட்டாலும், அங்குள்ள காவலர்கள் வீட்டுக்கே வந்து கைது செய்வார்கள். அது ஒரு மாயப்பின்னல்.

கழிப்பறை கிடையாது. மருத்துவ வசதிகள் கிடையாது. பணிபுரிபவர்கள் இறந்துபோனால், தூக்கிக்கடாசிவிட்டு ஊரிலிருந்து மேலும் சிலரை ஆசைக்காட்டி அழைத்துவருவார்கள். மனைவி இறந்தால், கணவன் ஒரு நாள் துக்கத்தில் இருக்கலாம். மறுநாள் எட்டி உதைத்து எழுப்பிவிடுவார்கள். பிரசவத்துக்குச் சில தினங்கள் மட்டுமே விடுமுறை அனுமதி. வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய்.

’நம்மைப் பொறுத்தவரை மலேரியா ஒழிப்புக்கும், மருத்துவத்துக்கும் ஏராளமான தொகையைச் செலவழிப்பதைவிட இந்த நாத்தம் பிடித்த பிச்சைக்காரப் பயல்கள் செத்துத் தொலைந்து போவதே நல்லது. கொஞ்சம் ஆட்கள் குறைந்து போவது இந்த நாட்டுக்கு மிகவும் நல்லது. பொருளாதார அடிப்படையில்.’ இப்படித்தான் நினைத்தார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள்.

பிரிட்டனுக்கு இந்தியா ஒரு காலனி நாடு. எதற்காக ஒரு நாடு காலனியாதிக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறது? அங்குள்ள வளங்களை உறிஞ்சுக்கொள்வதற்காக. அங்குள்ள மக்களைப் பயன்படுத்திக்கொள்வதற்காக. கைநிறைய லாபம் ஈட்டுவதற்காக. ’மனிதாபினத்தின் காரணமாக நாம் இங்கே வரவில்லை. இங்கிலாந்தில் இருக்கும் பங்குதாரர்களுக்கு லாபமீட்டித் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறோம். அதுவும் கொழுத்த லாபம். அதற்கான விலையை இந்த நாடு கொடுக்கிறதா அல்லது வேறு யாராவது கொடுக்கிறார்களா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நமக்கு லாபம் வேண்டும். அதை ஈட்டியே ஆகவேண்டும்.’

1900 முதல் 1930 வரை வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கேட்டறிந்து அழுத்தமான ஒரு நாவலாக உருமாற்றியிருக்கிறார் பி.எச். டானியல். ஆங்கிலத்தில் Red Tea. தமிழில் எரியும் பனிக்காடாக வெளிவந்துள்ளது. விடியல் பதிப்பம். மொழிபெயர்த்திருப்பவர், இரா. முருகவேள். மலையருவி போல் சரளமாகப் பாய்ந்து செல்லும் நடை. இப்படியும் மொழிபெயர்க்கமுடியுமா? (முருகவேள் அருமையாக மொழிபெயர்த்த மற்றுமோர் புத்தகத்தைத் தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்).

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் குடிபெயர்ந்த தமிழர்களின் கதை இன்னமும் சொல்லப்படவில்லை என்று ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதி சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். எத்தனை ஆயிரம் பேர் இங்கிருந்து அங்கே சென்றிருப்பார்கள்? இடையில் எத்தனை பேர் விலங்குகளிடம் சிக்கி இறந்துபோயிருப்பார்கள்? தேயிலைத் தோட்டங்களில் அவர்கள் அனுபவித்த சித்திரவதைகள் என்னென்ன? அங்குள்ள தோட்டக் கல்லரைகளில் எத்தனை தமிழர்களின் சடலங்கள் புதைந்துபோயுள்ளன?

தேயிலை, காபி தோட்டங்களில் மட்டுமே நிலவிவரும் கொடுமை அல்ல இது. இந்தியா முழுவதும் அடிமைமுறை இந்த நிமிடம் வரை பரவிகிடக்கிறது. கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும். அன்று ஐம்பதுக்கும் நூறுக்கும் விலைபோனவர்கள் இன்று ஒரு சில ஆயிரத்துக்கு தங்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. வெள்ளைக்கார துரைகளுக்குப் பதிலாக உள்ளூர் செல்வந்தர்கள். செங்கல் சூளைகளில் இருந்தும், திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்தும் மீட்கப்படும் கொத்தடிமைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. மீட்கப்படாமல் பல கருப்பன்களும் வள்ளிகளும் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

காலனியாதிக்கத்தின் நிஜ முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது எரியும் பனிக்காடு. கண்களில் நீர் சேராமல் இப்புத்தகத்தைப் படித்து முடிப்பது சிரமமானது.

நன்றி: மருதன்

கம்யூனிசம்


ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்
பகுதி: அரசியல்

விலை:  ரூ.85

  நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -14.போன் : 28482424, பக்கங்கள்: 512  

ஒரு மார்க்சிய பார்வை


ஆசிரியர்: பதிப்பக வெளியீடு
வெளியீடு: நக்கீரன் பப்ளிகேஷன்
பகுதி: அரசியல்

விலை:  ரூ.35

  நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105 ஜானிஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை -14.போன் : 28482424, பக்கங்கள்: 140  

பொலிவியாவில் புரட்சி ! இயற்கைவள மீட்புப் போர்களும் சமூக இயக்கங்களும்



ஆசிரியர்: நா. தர்மராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்


விலை:  ரூ. 90

  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை- 600098. போன் : 26251968, 26258410.  

"ரஷ்யப் புரட்சி" --என். இராமகிருஷ்ணன்


'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.

ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.

'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்சரிக்கத்தொடங்கியதும்அன்றிலிருந்துதான்.

மக்கள் என்ன பெரிய மக்கள்! அவர்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்புடன் சீட்டுக்கட்டைப் போல அவர்களைக் கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள் ஜார் மன்னர்கள். அந்த ஜார் வம்சத்தையே கலைத்துப்போட்டுக் காணாமல் போகச் செய்தது ரஷ்யப் புரட்சி.

உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த இந்த சிலிர்ப்பூட்டும் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது? இந்த மாபெரும் போராட்டத்தை எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படிச் செயல்படுத்தினார்கள்? மனித குலத்தின் மாபெரும் புரட்சியாக இன்றுவரையில் ரஷ்யப் புரட்சியைச் சொல்வதற்கு என்ன காரணம்?

சிலிர்க்க வைக்கும் இந்த வரலாற்றுப் பதிவில் அத்தனை கேள்விகளுக்கும் விடைகள் உள்ளன.

நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன், ஒரு பத்திரிகையாளர். தீக்கதிர் இதழில் தொடர்ந்து எழுதுபவர். 'மார்க்ஸ் எனும் மனிதர்', 'அயர்லாந்து - எண்ணூறு ஆண்டு விடுதலைப்போர்' உள்ளிட்ட ஐம்பது நூல்களின் ஆசிரியர். "



வெளியீடு,

கிழக்கு பதிப்பகம்.              பக்கம்:136          விலை:ரூ-75/00