வெள்ளி, 20 நவம்பர், 2009

நவம்பர் புரட்சிதின வாழ்த்துக்கள்


முதல் காம்ரேட் நூலில் இருந்து சில பகுதிகள். அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்.


0
தொழிலாளர்களிடம் நெருங்கி பழகினார் லெனின். அவர்களுடைய வாழ்க்கை முறையை, பின்புலத்தை, பொருளாதாரத் தேவைகளைக் கூர்மையாக ஆராய்ந்தார். காலம் காலமாக விளிம்பு நிலையிலேயே அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் அவலம் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்தார்.

பல தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டார் லெனின். அரசாங்க அதிகாரியைப் போல் புள்ளிவிவரங்கள் சேகரித்துக் கொண்டார். எந்தத் தொழிற்சாலை? எத்தனைப் பேர் வேலை செய்கிறார்கள்? ஆண்கள் எத்தனைப் பேர்? பெண்கள் எத்தனைப் பேர்? அவர்களுடைய ஊதியம் என்ன? ஆபத்தான சூழலில் வேலை செய்யும்படி அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்களா? அத்தனை விபரங்களையும் குறித்து வைத்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்றார். அவர்களுடன் சில நாள்கள் தங்கினார். குழந்தைகளை இழுத்து அருகில் வைத்துக் கொண்டு பேசினார். நீ ஏன் பள்ளிக்கு போவதில்லை? உனக்கு படிப்பதில் விருப்பம் இல்லையா? வேலைக்குப் போகும்படி உன்னை வீட்டில் நிர்பந்திக்கிறார்களா?

முன்னரே இயங்கிக் கொண்டிருந்த சில புரட்சிகர இயக்கங்களைச் சென்று சந்தித்தார்.

'தோழர்களே, இங்குள்ள தொழிலாளர்கள் நிலை மிகவும் மோசமாக இருக்கிறதே!என்ன செய்வதாக உத்தேசம்?'

'மார்க்ஸியம் சொல்லிக் கொடுக்கிறோம். கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எல்லாவற்றையும் சொல்லித் தருகிறோம். பிரசுரங்கள் விநியோகிக்கிறோம்.'

'இதையெல்லாம் செய்தால் சங்கடங்கள் விலகிவிடுமா என்ன?'

'என்னதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?'

'எரிச்சல் வேண்டாம் தோழரே. மார்க்சியத்தை படிப்பது முதல் கட்டம். படித்த விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவது அடுத்த கட்டம். நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியுள்ளது.'

அவர்களுக்குப் புரியவில்லை. லெனின் புரிய வைத்தார். நாங்கள் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்த பண்டிதர்கள் என்று பெருமையாக காலரை தூக்கி விட்டுக் கொண்டவர்களை முன் வரிசையில் உட்கார வைத்து அடிப்படை பாடங்கள் எடுத்தார். சில விஷயங்களை ஆணித்தரமாகத் தெளிவுப்படுத்தினார். தொழிலாளர்கள் மார்க்சியத்தை உள்வாங்க வேண்டும். அமைப்பு ரீதியாக அவர்கள் திரள வேண்டும். நடந்து கொண்டிருக்கும் பேராட்டம் அவர்களுக்காகத்தான் என்பதை உணர்த்தியாக வேண்டும். அவர்களை இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும். புரிந்ததா?

மார்க்சியத்தை ஒரு சித்தாந்தமாக, புத்தகத்தோடு தங்கிவிடும் ஒரு தத்துவமாக மட்டுமே பார்க்க பழகியிருந்த புரட்சிகர குழுக்கள் முதல் முறையாக அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

மற்றொருபுறம், தொழிலாளர்களின் ஆதரவும் லெனினுக்குக் கிடைத்தது. காரணம், முதல் முறையாக, அவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளையும் அளித்தார் லெனின். தொழிலாளர்கள் உற்சாகமடைந்தனர். லெனின் கலந்து கொள்ளும் அத்தனைக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை லெனின். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளவும் செய்தார். தொழிலாளர்களால் நேசிக்கப்படும் ஒரு தலைவராக லெனின் வளர ஆரம்பித்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

0
முதல் நாள். சுதந்தர சோவியத். அக்டோபர் 26-ம் தேதி. விவசாயிகள், தொழிலாளர்கள், புரட்சி வீரர்கள், கட்சி அங்கத்தினர் ஸ்மோல்னியில் கூடியிருந்தனர். அனைவரும் மேடையை உற்று பார்த்துக் கொண்டிருந்தனர். எங்கே அவர்?

கூடியிருந்தவர்களுக்கு அந்த இடம் போதவேயில்லை. அறை பிதுங்க பிதுங்க நின்று கொண்டிருந்தார்கள். நிற்பதற்கு இடம் இல்லாதவர்கள் ஜன்னல் வழியாக முண்டியத்து மேடையை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னமும் சிலர் தூண் விளிம்புகளில் ஏறி நின்று கொண்டிருந்தனர்.

உற்சாக மிகுதியால் சிலர் தலையில் அணிந்திருந்த தொப்பிகளை உயரே வீசிக் கொண்டிருந்தனர். எங்கும் உற்சாகக் கூச்சல்.

லெனின் மேடையில் தோன்றினார்.

கொண்டாட்டத்துக்கான சுவடே இல்லாமல் மிகச் சாதாரணமாக இருந்தது அவர் முகம். பார்வையால் விழுங்கி விடுவதைப் போல் மொத்த கூட்டத்தையும் ஒரு முறை பார்த்தார். பிறகு, கைகளை உயர்த்தினார்.

’இரண்டு ஆணைகளை இந்தச் சபையின் அங்கீகரத்துக்காக சமர்பிக்கிறேன்’.

அந்த அறை முழுவதும் எதிரொலித்தது அவர் குரல்.

முதல் ஆணை, சமாதனம் பற்றியது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது நம்முடைய போர் அல்ல. அதில் நாம் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தேவை போர் அல்ல. சமாதானம். பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு இந்தச் சபையின் ஒப்புதலை வேண்டுகிறேன்.

இரண்டாவது, நிலம். நிலம் மீதான தனியுரிமை நீக்கப்படுகிறது. நிலப்பிரபுக்கள், அரச குடும்பங்கள், குருமார்கள் போன்றவர்களுக்குச் சொந்தமான நிலம் பறிமுதல் செய்யப்படும். சோவியத் சபையின் பராமரிப்பின் கீழ் அவை வந்து சேரும். பறிமுதல் செய்யப்பட்ட நிலத்துக்கு ஈட்டுத்தொகை தர இயலாது. ஏழைகளிடம் உள்ள நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.

நன்றி.

அவ்வளவுதான். சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிவிட்டார் லெனின்.

புதிய சோவியத் தேசம் மலர்ந்த முதல் நாளே இரண்டு அரசாணைகள். இரண்டுமே முக்கியமானவை. ரஷ்யர்களின் வாழ்கை மாற்றி அமைக்கக்கூடியவை. சந்தோஷம். மகிழ்ச்சி. ஆனால், கூடியிருந்தவர்களுக்குச் சில விஷயங்கள் புரியவில்லை. போல்ஷ்விக் கட்சி மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. அரசாங்கமே அடியோடு மாறிவிட்டது. புதிய சோவியத் மலர்ந்திருக்கிறது. ஒரு சிறிய கொண்டாட்டம்? உற்சாகமாக சில வார்த்தைகள்? ம்ஹும். கேளிக்கை, கும்மாளம் வேண்டாம். குறைந்தது ஒரு வெற்றி புன்னகை? சரி அதுவும் வேண்டாம். கையசைவு? பெருமிதமாக ஒரு பார்வை. நாங்கள் வென்றுவிட்டோம் என்று ஒரே ஓர் அறிக்கை? ம்ஹும். எதுவுமே இல்லை. வந்தார். அரசாணைகளை வாசித்தார். நன்றி சொன்னார். போய்விட்டார். என்ன மனிதர் இவர்?

0

செஞ்சதுக்கம் , மாஸ்கோ. எப்போது போனாலும் அந்தக் கட்டடத்தின் வாசலில் மக்கள் எறும்புகளைப் போல் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்கள்.

நெருங்கிப் பார்த்தால் இரண்டு தனித்தனி வரிசைகள் இருப்பது தெரியும். ஒன்று ரஷ்யர்களுக்கு. இன்னொன்று அயல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு. கொல்லும் பனிக்காலத்தில்கூட மக்கள் அமைதியாகவே நின்று கொண்டிருப்பார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளையும் கையோடு அழைத்து வருவார்கள். அவர்கள் காது வரை கம்பளியைச் சுற்றி.

சில சமயம் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அல்லது அதற்கு மேல்.

பழுப்பு நிற சீருடை அணிந்த பாதுகாவலர்கள் ஆங்காங்கே இருப்பார்கள். மெடல் டிடெக்டரால் உங்கள் உடலை மேய்வார்கள். பாக்கெட்டில் இருப்பதை துழாவுவார்கள். உடைமைகளை உள்ளே கொண்டு போக முடியாது. நீங்கள். நீங்கள் மட்டும்தான்.

தவிரவும், இரண்டு இரண்டு பேராகத்தான் உள்ளே நுழைய முடியும்.

அந்த அறையை மார்பிள் அறை என்று அழைக்கிறார்கள். வெள்ளையும் கருப்புமாக மார்பிள் பதிக்கப்பட்டிருக்கம். இடையே சிவப்புச் சதுரங்கள்.

அறைக்குள் நுழைந்துவிட்டால் சில நிமிடங்கள் எதுவும் தோன்றாது. வெறுமை மட்டுமே முழுக்க முழுக்க நிறைந்திருப்பதாக நீங்கள் நம்புவீர்கள். அதிக வெளிச்சம் இருக்காது. ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள் என்பதால் பரிபூரன அமைதி. அமைதி மட்டுமே.

அறைக்கு நடுவே நடந்து சென்றால் லெனின் படுத்திருப்பதைக் காணலாம். கறுப்பு சூட். கழுத்தில் டை. அருகில் செல்லலாம். ஓரளவுக்கு நெருக்கமாகவே.

லெனினின் கைகளில் தெரியும் பளபளப்பை பார்க்கும்போது படுத்திருப்பது பொம்மையோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் முகத்தைப் பார்த்தால் அந்தச் சந்தேகம் வராது. வழக்கத்தை விட கூடுதல் பிங்க் நிறம். உயிர்ப்புடன் இருப்பது போன்ற உணர்வு.

அந்த உணர்வு கலைவதற்குள் வெளியேறிவிட வேண்டும். அல்லது நிர்பந்திக்கப்படுவீர்கள்.

சில விநாடிகள். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில நிமிடங்கள். அதற்கு மேல் நிற்க முடியாது. பின்னாலிருந்து மெலிதாக அழுத்துவார்கள்.

’தோழரே!’

மீள்பதிவு கட்டுரை
நன்றி:மருதன்
புகைப்படம். வினவு

கருத்துகள் இல்லை: