வெள்ளி, 23 அக்டோபர், 2009

இஸ்லாமிய வாழ்வியல் புதினங்கள்-10 ஆண்டு

மணிமாறன்


வாழ்வின் முழுமையைச் சொல்வது நாவல். காவியங்களால் எட்ட முடி யாத மாபெரும் உயரத்தையும் எட்டு கிற நாவலின் கலைவடிவம் தத்துவம். நாவலுக்குள் கலை ரீதியான விவாதம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. தத்து வமின்றி எந்த விவாதமும் இல்லை. எனவே தத்துவமின்றி நாவலுமில்லை. ஒரு சமூகத்தின் கூட்டு விவாதத்தின் கலை ரீதியான மாபெரும் வெளிப் பாடே நாவல். எல்லாவற்றையும் வர லாற்றின் முன் நிறுத்தி விசாரிக்கும் விஸ்தாரமான வெளிப்பாடு வடிவமாக நாவலே இன்று வரை நீடித்திருக்கிறது.

இவ்வகையில் இஸ்லாமிய மக் களின் கலாச்சார கூறுகளையும், தனித்த பண்பாட்டு அடையாளங்களை யும் தன்னுடைய ``ஒரு கடலோரக் கிரா மத்தின் கதை” யில் இருந்து தொடர்ந்து அக்கறையுடன் பதிவு செய்து வருபவர் தோப்பில் முஹமது மீரான். அவரு டைய இக்காலத்திய 2000 ஆவது ஆண்டுக்குப் பிந்தைய படைப்பு “அஞ்சு வண்ணம் தெரு”.

இஸ்லாமிய மரபுக் கதைகளை அஞ்சு வண்ணம் தெருவின் அழிவின் வழியாக எழுதிப் பார்த்திருக்கிறார் மீரான்.

நபீசா மன்ஸிலின் பெயரை தாருல் ஸாஹினா என்றாக்கிடும் பொழுதிற் கான இடைவெளிகளில் அஞ்சு வண் ணம் தெருவின் வரலாற்றை அழியாத வரலாற்றுக் கதைகளின் ஊடாக கடக் கிறார்.

மம்மதும்மா ஒரு அசாத்தியமான பெண் பாத்திரம், வெள்ளை பரங்கி யரை எதிர்த்து கிலாபத் போராட்டத் தில் மலபாரில் உயிரைத் துச்சம் என நின்று போராடிய அயம்மதாஜியின் வழித் தோன்றல் என்கிற புனைவு அவ ளுடைய மனநிலையை வாசகனுக் குள் கத்தியென இறக்குகிறது.

மீரானே நாவலில் சொல்வது போல இந்த நாவல் வரலாற்றை ஞாபகப்படுத் திடும் செயல். `` வரலாறு ஆபத்துக் கட்டங் களில் கையெட்டிப் பிடிக்க கூடிய நினைவு களாகும் என்பது அவர் களுக்குத் தெரி யாது. பன்னாட்டு ஏகாதிபத்திய ஆதிக் கம் நடக்கும் இன்றைய ஆபத்தான சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதி ராகப் போராடுவதற்கு நமக்கு சில நினைவுகள் தேவைப்படுகின்றன.

பின்பகுதி முழுக்க நிகழ் காலத் தில் இயங்குகிறது. தவ்ஹீதுக்களுக் கும் சுன்னத்துல் ஜமாஅத்காரர் களுக்குமான சண்டை சச்சரவுகளாக நீடிக்கிறது. இஸ்லாமியச் சமூகத்திற் குள் தங்களுடைய வழிபாட்டு முறை குறித்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உள் முரண்பாடுகளை நாவலின் மையமாக்கி கடக்கிறது.

தொப்பி போடணுமா - போடக் கூடாதா விரல்ஆட்டித் தொழனுமா அல்லது விரல் ஆட்டக் கூடாதா? என்று இன்றைக்கு தமிழகத்து இஸ் லாமியத் தெருக்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தத்துவச் சண் டையை காட்சிப் படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய வலைத் தளத்தில் கொண்டாடியிருக்கிறார். அதற்கு வேறு எதுவும் முக்கிய கார ணம் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. நாவலின் பல இடங்களில் “பெட்ரோல் துட்டு தவ்ஹீது காரங்க கிட்ட விளையாடுகிறது. வெளி நாட்டுப் பணத்துல இங்க கலவரம் பண்ணிக் கிட்டு திரியிறாங்க” என்கிற ஜெயமோகனின் உள் குரலையே மீரானும் எழுதிச் செல்வது தான்.

நாவலை வாசித்து முடித்த நீண்ட நேரத்திற்குப் பிறகும் நம்முடைய மனங்களில் வன்கொலையாகப் பலியிடப்பட்ட தாயம்மாவும், மெஹ் ராஜ் இரவின் கவித்துவ வரிகளை தந்து சென்ற ஆலிப்புலவரும், அகற் றப்பட்ட வேப்பமரமும், மைதீன் பிச்சை மோதீனும், தைக்காப் பள்ளி யும், விஷப்பற்களை நீக்கிய பின் தாயோடு நிற்கும் பாம்பும் நிழலாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

400 பக்கங்களுக்கும் குறைவாக எழுதுவது எல்லாம் நாவலே அல்ல. நாவல் என்பது விஸ்தாரமான பரப்பு. வரலாற்றின் முன் ஞாபகங்களை வைத்து விளையாடும் மொழி விளை யாட்டு நாவல் என்று எழுத்தாளன் மிரட்டப்பட்டுக் கொண்டிருந்த நாட் களில் எழுதவந்தவர் கீரனூர் ஜாகிர் ராஜா.

அவருடைய மீன்காரத்தெருவும், கருத்த லெப்பையும் அதுவரை தமிழ்ச் சமூகம் அறிந்திராத இஸ்லா மிய கலாச்சாரத்தைப் பதிவு செய் தன. இரட்டை விரல்களுக்குள் மட் டும் அடங்கிவிடக் கூடிய வடிவில் மிக விரிவான தனித்த இஸ்லாமிய பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளை அவற்றில் அவர் பதிவு செய்திருந் தார். குறிப்பாக தமிழ் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களோடு இயைந்து கிடந்தது நாவலுக்குள் விரிந்த வாழ்வு.

ஜாகிரின் மூன்றாவது நாவல் துருக் கித் தொப்பி. வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் கதையின் ஊடாக மனித மனங்களுக்குள் ஊறிக் கிடக்கும் வக் கிரம், காமம், அன்பு, இயலாமை, குற்ற வுணர்ச்சி என யாவும் பதிவாகிறது.

கே.பி.ஜே., அல்லாவுத்தலா, ரகம் மது என தொடரும் ஆண் மனங்களின் வழியாக மர்லின் மன்றோ, காம புத் தகங்கள், அரசியல் வெறி, சீட்டுக் கச் சேரி, பெண்கள் சகவாசம், வெட்கமும் குற்றமும் உணராத காமம் என மனித மனங்களின் சகிக்க முடியாத குரூரம் பதிவாகியுள்ளது.

தான் பிள்ளை பெற்ற நாளில் வந்து தொலைத்த அம்மைநோயால் பிள்ளைக்கு பால் தர முடியாத துய ருக்கு ஆளான நூர்ஜஹான் அதற்கு காரணமாயிருந்த மூத்த பிள்ளை ரகமதுல்லாவை வாழ்நாள் முழுக்க திட்டியபடியே இருக்கிறாள். தன் துய ரைத் தீர்க்க ஏழுவயது வரை தன்னு டைய இரண்டாவது மகன் இக்பாலுக்கு பால் புகட்டிக் கொண்டேயிருக்கிறாள்.

நாவல் சமகால அரசியல் வரலாற் றின் வழியே தான் நகர்த்தப்படுகிறது. தமிழ் இஸ்லாம் எனும் கலாச்சார வெளியைத் தான் நாவல் முழுக்க காட் சிப்படுத்தியிருக்கிறார் ஜாகிர்.

நாவலில் ஈஷா நபி தான் இயேசு என்கிற விளக்கமும், கிறிஸ்தும் இறைத் தூதரே என நிறுவியிருப்பதும் அந்த சர்ச் வாசலில் ரகமதுல்லா இயேசுவுடன் உரையாடுவதும் காவியக் காட்சிகள். தன் வயதில் ஏற்படக்கூடாத வலியை அம்மாவின் கற்பு குறித்த குழப்பத்தை அப்பாவுக்கு கடிதமாக எழுதி கடிதத் தோடு அம்மாவிடம் மாட்டிக் கொள் ளும் ரகமதுல்லா ஒரு விசித்திரமான பாத்திரப்படைப்பு.

எல்லா மாபெரும் இலக்கியங் களும் கச்சிதமாக முடிவதில்லை. எதையோ வாசகனுக்குச் சொல்லி, சொல்லாமல் விட்டவற்றை தேடியலை வாயாக என கதவைத் தான் திறந்து விட்டிருக்கின்றன.

அப்படித்தான் துருக்கித் தொப்பி யின் முடிவும் அமைந்திருக்கிறது. நாவ லைப் படித்து முடித்த பிறகும் வயதை யும் மீறி ரோட்டில் கிடந்த கல்லைத் தூக்கி எறிந்தேன். அதுயார் மேல் விழுந் ததோ தெரியவில்லை. கல்லடிப்பட்ட வர் கே.பி.ஜேவாகக் கூட இருக்கலாம்.

மற்றொரு மிக முக்கியமான இஸ் லாமிய கலாச்சார வாழ்வை பதிவு செய்த மிக முக்கிய ஆவணம் சல்மா வின் `` இரண்டாம் ஜாமங்களின் கதை யாகும்”. மிகுந்த சவாலான களத்திற் குள் நாவல் பயணிக்கிறது. இரண்டாம் ஜாமத்தின் பெண் உடலுக்குள் இயங் கும் பெரு மூச்சும், கண்ணீரும், பரவச மும், வேதனையும், வலியும் நாவலின் வரிகளுக்குள் கேட்டபடி இருக்கிறது. சமீபத்தில் ஆங்கில, மலையாள மொழி பெயர்ப்பு கண்டிருக்கிறது இரண்டாம் ஜாமங்களின் கதை.

92 டிசம்பருக்கும், செப்டம்பர் 11க்கும் பிறகான இஸ்லாமிய தெருக்களின் மன நிலையையும் ரயில்வே ஸ்டேஷன் களில் தன் மதம் சார் அடையாளத்தால் கருப்பு அங்கி நீக்கி பார்க்கப்படும் பெண்களின் துயரையும், வலியையும் இனிமேல் தான் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வன்முறையையும் இஸ்லாத்தையும் ஒரே கோட்டில் இணைத்துப் பார்க்கிற மனங்களை ஊடறுக்கும் இலக்கியப் பதிவு எப் போது உருவாகுமோ தெரியவில்லை.

நன்றி:தீக்கதிர்

கருத்துகள் இல்லை: