செவ்வாய், 20 அக்டோபர், 2009

அயர்லாந்து 800 ஆண்டுகால புரட்சி..



என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். 


ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம் வேண்டாம், ஐரிஷ் மக்களைப் போல் நாமும் போராடுவோம் என்று அழைப்பு விடுத்தார் சுபாஷ் சந்திர போஸ்.

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் பிரிட்டனின் காலனி நாடுதான். முதல் உலகப் போரை (1914-1918) ஐரிஷ் மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பிரிட்டனுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முடுக்கிவிட்டார்கள். இங்கே இந்தியாவில் காந்தி, நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தார். போரில் ஈடுபட்டிருக்கும்போது பிரிட்டனை எதிர்ப்பது சரியல்ல அவர்களுக்கு உதவவேண்டிய சமயம் இது என்றார்.


புத்தகத்தின் பின் அட்டை வாசகங்கள் கீழே.


அப்போதைய இங்கிலாந்தின் படைபலத்தோடு ஒப்பிட்டால் அயர்லாந்து சுண்டைக்காயைவிடச் சிறியது. மிதிக்கக்கூட வேண்டாம், தடவினாலே தடமின்றி போகும் அளவுக்குப் பூஞ்சையான தேசம் அது. அயர்லாந்து மக்கள் ஆட்டு மந்தைகள். அவர்களை அடக்கி அடிமைப்படுத்துவதில் தவறேதுமில்லை. இப்படித்தான் நினைத்தது இங்கிலாந்து. எதிர்பார்த்தபடியே சிறு எதிர்ப்பும் இன்றி அடங்கி சுருண்டுபோனது அயர்லாந்து.

தங்கள் மொழி, இனம், கலாசாரம், அடையாளம் அனைத்தும் சிறிது சிறிதாக அழிக்கப்படுவதைக் கண்ணால் கண்டு துடிதுடித்து நின்றனர் ஐரிஷ் மக்கள். வழிகாட்ட தலைவர் இல்லை. எதிர்த்து நின்று போராடுவதற்குப் படைபலம் இல்லை. ஒன்றுபடுத்தவும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் வலிமையான அரசியல் சித்தாந்தம் எதுவும் இல்லை. தேசம் காக்கப்படவேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மீட்பர் ஒருவர் வருவார், நிலைமை தாமாகவே மாறும் என்று கன்னத்தில் கைவைத்துக் கிடப்பதால் பலன் ஏதும் இல்லை. சிறு துரும்பையாவது கிள்ளிப்போடலாமே!

இப்படித்தான் தொடங்கியது அந்த வீரம்செறிந்த போராட்டம். சுமார் 800 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்தின் இறுதியில் அயர்லாந்து சுதந்தரம் அடைந்தது. உரிமைகளுக்காகக் கொடிபிடிக்கும் உழைக்கும் மக்களின் உந்துசக்தியாகத் திகழும் மகத்தான போராட்ட வரலாறு அது.

கருத்துகள் இல்லை: