திங்கள், 26 அக்டோபர், 2009

புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....தமிழ்ப் புத்தக உலகம் 1800 - 2009



புத்தகங்களின் வரலாற்றிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி....


புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் உலகப் புத்தக தினத்தை அறிவார்ந்த தளத்தில் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2008, ஏப்ரல் 23) தமிழில் உள்ள முதன்மையான நூல்கள் குறித்து விவரணைகளும் சில முக்கியமான நூல்கள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வாசிக்கப்பட்டன என்பது குறித்தும் ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. சமகால வரலாற்றுக்கான முக்கியமான ஆவணமாக அம்மலர் சிறக்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே ‘தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009’ என்னும் இம்மலர்....

தமிழில் புத்தக உருவாக்கம் என்பது காலனிய ஆட்சியாளர்களாலும் கிறித்தவ மதப் பாதிரியார்-களாலும் தொடங்கப்பட்டு, பின்னர் சுதேசிகளால் விரிவான தளத்தில் முன்னெடுக்கப்பட்டது. 16ஆம் நூற்றாண்டிலேயே அச்சு இயந்திரம் வந்த பொழுதும் 19ஆம் நூற்றாண்டில்தான் அது பெரிதும் பரவலாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் புத்தக உருவாக்கம் இரு தளங்களில் நடைபெற்றது. ஓலைச்சுவடிகளில் இருந்த நூல்கள் பதிப்பிக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டதுடன் அக்காலத்தில் எழுதப்பட்டும் புத்தகமாக்கப்பட்டன. இந்த புத்தக உருவாக்க முறைமை தமிழ்ச் சமூக வரலாற்றோடு எவ்வாறு ஊடுபாவாக வளர்ந்து வந்தது என்பதைக் காண வேண்டியுள்ளது.

புதிதாக உருவாகிவந்த தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுத்து ஒரு சமூகம் வளர்ந்த தன்மையை இப்புத்தக உருவாக்கத்திலிருந்து பெறமுடியும். குறிப்பாக புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியன குறித்தும் அதற்குப் பின்னால் இயக்கம் கொண்டுள்ள சமூக அசைவியக்கம் குறித்தும் நவீன வரலாறு பெரிதும் அக்கறை கொள்கிறது.

வெளியிடுவதற்காக நூல்களைத் தேர்வு செய்யும் முறைகள், தன்மைகள், நூலாசிரியர் பதிப்பாசிரியருக்கும், வெளியீட்டு நிறுவனங்களுக்கும் உள்ள உறவுகள், எத்தகைய வாசகரை மையம் கொண்டு நூல்கள் உருவாக்கப்பட்டன என்ற தகவல்கள், நூலாசிரியர்கள், பதிப்பாசிரியர்களுக்கு சமூகம் அளித்த முக்கியத்துவம், வெளியான நூல்கள் ஏற்படுத்திய சமூக விளைவுகள், வெளியான நூல்களின் மீதான சமூக அறவியல் பார்வைகள் ஆகியன இக்களத்தில் பெரிதாக விவாதிக்கப்பட வேண்டியன.

புலமைத் தளத்தில் நிகழ்ந்த நூலுருவாக்கத்திற்கு இணையாக வெகுசன தளத்திலும் நூல்கள் உருவாகி வந்தன. அதுகுறித்த ஆய்வுகளும் இதில் முதன்மை பெறுகின்றன. தமிழில் இதழ்களின் உருவாக்கமும் நூல்களின் உருவாக்கமும் அச்சுப்பண்பாடு என்ற ஒன்றைக் கட்டமைத்தன. அச்சுப்பண்பாட்டைப் புரிந்து கொள்ள நூல்கள் வெளியான முறைமைகள் குறித்தும் அதன் பின்னால் உள்ள தன்மைகள் குறித்தும் அறிய வேண்டியுள்ளது. அதற்கான தொடக்கமாகவே இதில் பதிப்பு தொடர்பான கட்டுரைகளுக்கு முதன்மை தரப்பட்டது. பதிப்புகளின் பன்மைத்துவத்தை விளக்கும் வகையில் தனிநபர் சார்ந்த பதிப்புகள் குறித்தும், துறைவாரியான பதிப்புகள் குறித்தும், காலவரிசையில் அதன் வளர்ச்சி குறித்தும் இதிலுள்ள கட்டுரைகள் விவாதிக்கின்றன. பதிப்புகள் குறித்த ஆய்வுக்கான மூல ஆவணங்கள் அருகி வருகின்ற சூழலில் கடின உழைப்பின் மூலம் நுட்பமான தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரை ஆசிரியர்கள் ஆராய்ந்துள்ளனர்.

இதிலுள்ள கட்டுரைகளில் சில ஆவண ஆய்வாகவும், சில விவரண ஆய்வாகவும், சில விமரிசன ஆய்வாகவும், சில அறிமுக ஆய்வாகவும் அமைகின்றன. அனைத்துக் கட்டுரைகளிலும் அடிச்சரடாக இழையோடுவது நுட்பமான தரவுகளும் சமூக வரலாற்றுப் பின்னணியில் அவற்றை ஆராயும் தன்மையுமே எனலாம். தமிழ்ப் புத்தக உலகம் தொடர்பான அனைத்து விவரணைகளும் இதில் இடம்பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. சில விடுபடல்களும் உண்டு. இது ஒரு தொடர் ஓட்டம். மேலும் தொடரவேண்டிய தேவை நம் அனைவருக்கும் உண்டு.



பொருளடக்கம்

தனி மனிதப் பதிப்புகள்

ஆறுமுக நாவலர் (1822-1879) - பொ. வேல்சாமி

சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901) - ஜ. சிவகுமார்

தான் கலந்த தமிழ் : உ.வே.சா. பதிப்பித்ததிலிருந்தும் பதிப்பிக்காமல் விட்டதிலிருந்தும் சில குறிப்புகள் - அ. சதீஷ்

வட்டார இலக்கியப் பதிப்பு முன்னோடி : தி.அ. முத்துசாமிக் கோனார் - பெருமாள்முருகன்

தமிழ்ப் பதிப்பு வரலாறு : ரா. இராகவையங்கார் (20.09.1870 - 11.07.1946) - கா. அய்யப்பன்

வ.உ.சி.யின் பதிப்புப்பணி ஆ. சிவசுப்பிரமணியன்

வையாபுரிப் பிள்ளையின் சங்க இலக்கியப் பதிப்பும் திருமுருகாற்றுப்படை பதிப்புகளும் - பு. ஜார்ஜ்

மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை வேணுகோபாலப் பிள்ளை [1896-1985] - கோ. கணேஷ்

தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்களின் பதிப்புப்பணி : சிறு குறிப்பு - உல. பாலசுப்பிரமணியம்

உரை மரபிலிருந்து பதிப்பு மரபை நோக்கி...தி.வே. கோபாலையரின் பதிப்புகளில் வெளிப்படும் புலமைத் தன்மைகள் குறித்த உரையாடல் - பா. இளமாறன்

பொதுக் கட்டுரைகள்

பழைமைக்கும் புதுமைக்கும் பாலமாகும் புதுச்சேரி - புதுவை ஞானகுமாரன்

ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் : பிரச்சனைகளும் செல்நெறியும் - ந. இரவீந்திரன்

சிங்கப்பூர் பதிப்புத்துறை - எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி

மலேசியத் தமிழ்க் கட்டுரை இலக்கியம் - ரெ. கார்த்திகேசு

தமிழ் நூற்பதிப்பும், ஆய்வு முறைகளும் - கார்த்திகேசு சிவத்தம்பி

சென்னைக் கல்விச்சங்கம் வெளியீடுகள் - தாமஸ் ஆர். டிரவுட்மேன் தமிழில்: அபிபா

ஐரோப்பிய மொழிகளில் தமிழ் இலக்கண நூல்கள் (1550-1950)ஆர்.இ. ஆஷெர் தமிழில்: ஆர். பெரியசாமி

தமிழ் முஸ்லிம்களின் அச்சுக் கலாசாரம் (1835-1947) - J.P.B. மோரே

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அச்சுப் பண்பாடும் புத்தக உருவாக்கமும் - பேரா. வீ. அரசு

19ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியப் பதிப்புகளின் போக்குகள் - வெ. ராஜேஷ்

இசை நூல் பதிப்புகள் - அரிமளம் பத்மநாபன்

நிகழ்த்துக்கலைப் பதிப்புகள் கும்மி அச்சுப் பிரதிகள் - அ. கோகிலா

நாட்டார் வழக்காற்றுத் தொகுப்புகள் - பதிப்பு வரலாறு பற்றிய குறிப்புகள் - முனைவர் ஆ. தனஞ்செயன்

தமிழில் சிறார் இலக்கியம் - சில குறிப்புகள் - வ. கீதா

காற்றில் கலந்த புத்தகங்கள் - டி. தருமராஜன்

நூற்றொகை பதிப்புகள் - து. குமரேசன்

மொழிபெயர்ப்பு பதிப்புகள் - ந. முருகேசபாண்டியன்

கிறித்தவத் தமிழ்ப் படைப்புகள் - அமுதன் அடிகள்

பௌத்தத் தமிழ் நூல் பதிப்புகள் - கே. சந்திரசேகரன்

வைணவப் பதிப்புகள் - முனைவர் சு. வேங்கடராமன் ( தமிழில் : ரபெசா )

கம்பராமாயணப் பதிப்புகள் - நூற்பட்டியல் - அ.அ. மணவாளன்

கையேடுகளின் நிரந்தர ஆட்சி! - தமிழ்மகன்

பொதுவுடைமை இயக்கப் பதிப்புகள் - ஆர். பார்த்தசாரதி

தலித் பிரசுரங்களும், நூல்களும் (1910-1990) - ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழ் நிகண்டுகளின் பதிப்புத்தடம் - மா. சற்குணம்

கமில் சுவெலபில் பார்வையிலான தமிழ்ப் பெயரடை-வினையடை வரையறைகளும் தமிழிலக்கண தமிழ் அகராதியியல் மரபுகளும் - பெ. மாதையன்

நிறுவனம் சார்ந்த பதிப்புகள்

எளிய அமைப்பு, மலிவு விலை : சாக்கை ராஜம் பதிப்புகள் - இரா. வெங்கடேசன்

பதிப்புத்துறையில் பாண்டித்துரைத் தேவரின் நான்காம் தமிழ்ச்சங்கம் - ஒரு பார்வை - பா. தேவேந்திர பூபதி

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகமும் தமிழ்ச் சுவடிப் பதிப்புகளும் - முனைவர் ப. பெருமாள்

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை - வ. ஜெயதேவன்

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு - கல்பனா சேக்கிழார்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள் - முனைவர் மு. வளர்மதி


தற்போது விற்பனையில்....



விலை : ரூ 95.00

பக்கங்கள் : 320

வெளியீடு : பாரதி புத்தகாலயம் 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,சென்னை - 18

தொலைபேசி : 91 - 44 - 24332424, 91 - 44 - 24332924

e-mail : thamizhbooks@gmail.com

நன்றி: விருபா

கருத்துகள் இல்லை: